A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

20 Dec 2012

பாரதியின் குயில் பாட்டு - 2

தலைவியின் விரக தாபம் போல தன்னிடம் காதலைச் சொன்ன குயிலின் மனமாற்றத்தில் குழம்பி பரிதவிக்கும் நமது கவிஞர் கடுந்துகிலில் ஆழ்ந்துவிடுவதை முதல் பகுதியில் பார்த்தோம். நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னைச் சந்திக்க வரச்சொன்ன குயில் இடைப்பட்டவேளையில் குரங்கு, காளை எனப் புது காதல் முயற்சிகளில் ஈடுபட்டுவிட்டதைக் கண்டு கவிஞரின் மனம் பித்து பிடித்தலைந்தது. ஆனாலும் காலை புலர்ந்ததும், புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி மண்ணத் தெளிவாக்கிய ஜோதி கவிஞரையும் தெளிவடையச் செய்துவிட்டதாம். `குயிலென்னை எய்துவிட்ட தாழ்ச்சியெல்லாம்` சற்றே ஒதுக்கிவைத்தவர், தன்னருகே பறந்த கரும்பறவை ஒன்றைக் கண்டார்.
 
மாஞ்சோலையைத் தேடிப் போகும் வழியில் இதென்ன புது குழப்பம்? காலை வெளிச்சத்தில் சரியாகத் தெரியாத காரணத்தால் வீதிக்கு வந்து கரும்பறவையைத் தொடரத் தொடங்குகிறார். ஒருவேளை இதுதான் நமது குருவியோ? மாரீசனைப் போல் ஏதேனும் கபடநாடக வேசத்தை பூண்டு தன்னை மீண்டும் வசப்படுத்தப் பார்க்கிறதோ எனும் குழப்பத்தில் கரும்பறவையைப் பார்த்து நிற்கிறார். தேவதூதனின் பிறப்பை அறிவித்த நட்சத்திரம் போல எதை அறிவிப்பத்ற்காக கரும்பறவை அவரை வலம் வருகிறது?
 
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும்


கரும்பறவையைத் தொடர்ந்தால் தனது மாஞ்சோலைக்கு சென்றுசேர்கிறார். ஆங்கு மரக்கிளையில் வீற்றிருந்த தனது `நீசக்` குயிலை பொய்வேஷம் போட்டதற்குக் கொன்றுவிடலாமோ எனும் எண்ணம் கவிஞருக்கு உதிக்கிறது. உடனடியாக அழத்தொடங்கும் குயில், தன் கதையைக் கேட்டபின்னும் நம்பிக்கை வராவிட்டால் நீயிற் தன்னை அழித்துவிடவேண்டுமெனக் கெஞ்சுகிறது.
 
 
 


பூர்வ ஜென்மத்தில் பொதிகைமலை அருகிருந்த வேடவக்குலத் தலைவனின் மகளாகப் பிறந்திருந்தது குயில். காமத்தினால் தன்வசம் இழந்த மாமன் மகன் மாடன் அவளை மணம் முடிக்க சம்மதம் கேட்க, அவனது வருத்தம் சகிக்கமாட்டாது சரியெனச் சொல்லிவிட்டாள். பின்னர் அஞ்சி நடுங்கும் குரங்கன் எனும் வீரனுக்கு தனது மகளை மணம் முடிப்பதாக வேடர்வர் தலைவன் வாக்கு தந்துவிட்டார். மாமன் மகன் எதிர்த்து நிற்க, அவனுக்குப் பயந்து திருமணத்துக்குப் பின்னர் உன்னுடன் வந்துவிடுவேன் என அவள் வாக்கு கொடுக்கிறாள். இதற்கிடையே மன்மதன் போன்ற மாமன்னன் அவளது அழகில் மயங்கி விண்ணப்பிக்க,


நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய்;
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்

எனும் இடத்தில் கம்பனின் அன்னலும் நோக்கினாள், அவனும் நோக்கினான் எனும் பிரயோகத்தை பாரதி சரியாகப் பயன்படுத்துகிறார். விதியின் வழி வந்து சேர்ந்த மூன்று முறையிலும் காதல் ஒருமுறை தான் பூத்தது. பயத்தினாலும், கருணையினாலும் கட்டாயப்படுத்தப்பட்ட இரு காதல்களும் காலம் தாண்டி, நிலம் தாண்டி, உயிர் தாண்டி ஜீவித்துத் தொடரும் என அவள் எதிர்பார்த்தாளா என்ன? விழி முழுவதும் காதலுடன் அருகில் வந்த மாமன்னனைப் பார்த்ததும் அணை உடைந்தது; கரை கடந்தது.

காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவினிலே
சோர்ந்துவிட்டாய் மன்னவன்றன் திண்டோளை நீயுவகை
ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச்
சிந்தை கொண்டாய் வேந்தன் மகன்
தேனில்க் விழும் வண்டினைப் போல்
விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல்
ஆவலுடன் நின்னையறத்தழுவி

என ரொமாண்டிக்கான நேரத்தில் கவிஞருக்கு சென்சார் போர்டு ஞாபகம் வந்ததுபோல, வில்லன் குரங்கனை அங்கு நுழைத்துவிடுகிறார். நிச்சய தாம்பூலமும் ஆனபின்னர் உனது அப்பாவின் வேடக்குலக் காவலனுமான என்னை எதிர்க்கத் தைரியம் கொடுத்தவன் யார் என மாமன்னனுடன் சண்டையில் இறங்கினான். வெட்டிரண்டு வீழ்ந்தன நமது மாமன்னன் முதுகில், வீச்சிரண்டு கிழித்தன குரங்கன் முகத்தை. சண்டையின் இறுதியில் மாண்டு விழுந்த குரங்கன் மீது சரிந்த மாமன்னன் அடுத்த ஜென்மத்திலும் காதலிப்போம் எனத் தொடரும் கார்டு போட்டு வீழ்ந்துவிடுகிறான்.
 
முனிவர் தன்னிடம் சொன்னதாக இக்கதையை குருவி கவிஞரிடம் கண்ணீர் மல்கக் கூறிற்று. தன்னை வசப்படுத்த இந்த ஜென்மத்திலும் மாடாகவும், குரங்காகவும் பிறந்து துன்புறுத்துகிறார்கள்; ஆனால் குயிலோ தனது மாமன்னனைத் தேடுகிறேன் எனப் பெருங்குரலில் அழுதது. மானிடர் கூட்டத்தில் தனது காதலனை எவ்விதம் காண்பேன் எனும்போதுதான், உனது பாடலில் மனமுருகி காதலோடு ஒரு கவி வருவான் என முனிவர் சொல்கிறார். மானிடக் காதலில் அஃறினைகளுக்கு இடம் உண்டா? காதலனை கண்ட பின்னும் ஆவிகலக்க முடியாத வடிவில் இருக்கிறதே குருவி? முக்காலம் தெரிந்த முனிவர், அக்கவியின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பாய் - உனது மரணம், காதல் இனி அவன் கையில் எனக் கூறியதாகச் சொன்ன குயில் நமது கவியின் கையில் வீழ்ந்தது. அதனை வாரியெடுத்து முத்தம் கொடுக்கப் போகும் வேளையில், நேரங்கெட்ட நேரத்தில் தான் நமது கவிக்கு வெட்கம் வந்துவிடும் போலும், கனவிலிருந்து மீள்கிறார்.
 
மாலையழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென கண்டுகொண்டேன்
கற்பனையே யானாலும்
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறிரே?

என பாரதி சட்டென முடித்துவிடுகிறார்.

 
கவிதை இத்தோடு முடிந்தாலும் கவிஞரின் சில கேள்விகள் கவிதையின் சாரத்தை அசை போட்டு பார்க்க வைக்கின்றன.
 
குயிலின் அழகை எப்படி தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசயத்தை எப்படி எழுதுவேன்?
 
கவிஞர் குயிலைப் பற்றி பாடவில்லையோ எனும் சந்தேகம் கீழுள்ள வரிகளில் எழுகிறது:
 
மீள விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லில் அகப்படுமா?
 
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்து கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.
..இதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்த பின்னே..

 
ரெண்டு அவுன்ஸ் கவிதை கனிபிழிந்த சாறு + பண் + கூத்து + அமுது எனக் கலந்து அதில் காதல் எனும் ஸ்பூனால் கலக்கினால் வருவது குயிலின் மேனி என்கிறார் பாரதி. இயல் இசை நாடகம் எனும் மொழி பண் கூத்தின் சாரத்தை நமது மொழியில் காண்பதைச் சொல்கிறாரோ எனும் சந்தேகம் நமக்கு வருகிறது. அவளது இதழில் முத்தமிட முத்தமிட , `மோகத்தைக் கொன்றுவிடு` எனும் காதலின் உச்சகட்ட நிலையை அனுபவிக்கச் சாத்தியமானக் காதல் ஓர் கனவிலா கவிஞருக்கு வந்திருக்க முடியும்? அல்லது கவிதையைத்தான் கூடுவிட்டு கூடு பாயும் காலச்சுமை எனக்கூறுகிறாரா?

 
பாரதியின் பல கவிதைகளில் கவிதையையே தனது காதலியாக உருவகப்படுத்தியுள்ளார்.
 
கவிதைக் காதலி எனும் கவிதையில்,
என்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;
கலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்
பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற
தீங்குர லுடைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்,
மலரினத் துன்றன் வாள் விழி யொப்ப
நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்?

 
எனக் கவிதையையே காதலியாகக் கொண்டு காதலில் திளைத்த இன்பத்தை பெரும் கூடல் நிகழ்வாக வர்ணிப்பதைப் பார்க்கும்போது குயில் பாட்டு நமது தமிழ் கவிதையின் தேன் குரல் தான் எனும் சந்தேகம் வலுக்கிறது. கவிதையுடன் திளைத்த நாட்களில் குயிலும் மறந்துவிட்டதாம். குயில் பாட்டின் உட்கருத்தைப் புரிந்துகொள்ள `கவிதைக் காதலி` எனும் இக்கவிதையையும் நாம் படிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

 
ஆழ்வார்கள் பற்றி  ஏ.கே.ராமானுஜன் எழுதும்போது, இப்புவி மீது கால் பாவித்தாலும், வாமணன் போல விண்ணிலும் அண்டத்திலும் தங்கள் இருப்பை எய்தி ஆட்கொண்ட கனவில் வாழ்பவர்கள் எனக் குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதைப் பித்தும், தமிழ் மேல் கொண்ட பெருமதிப்பும் அப்பேற்பட்டவை தாம் போலும். கவிதையையே காதலியாக்கி, அதன் அகக் குறிப்புகளோடு கற்பனைலோகத்தில் சஞ்சரிப்பதை அவரது பல கவிதைகளில் காண்கிறோம். அது போலவே அவருக்கு இயற்கை மீதிருந்த லயிப்பும் சொல்லில் அடங்காதது. விண்ணையும், மண்ணையும், பூவையையும், புள்ளையும் சதா மனம் எண்ணிக்கொண்டே இருந்திருக்கிறது. கவிஞரின் குயில் போல, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிப் பறந்து,கூடு விட்டுக் கூடு பாயம் வித்தை பாரதியின் கற்பனைக்கு இருந்திருப்பதற்கு இவை சான்று.

 
பாரதி வரை வாழ்ந்த கவிஞர்கள் அனைவரும் தங்கள் கவிதைகளைப் பாட்டாகப் பாடியுள்ளனர். அந்தப் போக்கு அவருக்குப் பின்னர் அறவே நின்றுவிட்டது ஏன்? பண்ணில் கலந்துருகிப் பாடிய கவிகள், கவிதையின் பொருளோடு சொற்களின் வடிவொழுங்கையும் அனுபவித்து இயற்றும் பாங்கினை இயற்கையாகப் பெற்றிருந்தனர். எந்த காலகட்டத்தில் கவிதை என்பது சொற்கள் உணர்த்தும் வெளியாக மட்டும் மாறியது? வண்ணக் காட்சி களையிழந்து கருப்பு வெள்ளையாக மாறியது போல் திடீரென எதோ ஒன்று கவிதையில் குறைந்தது போலுள்ளது. குவளையின் குறிப்புகளிலும், யதுகிரி அம்மாளின் குறிப்புகளிலும் பாரதியின் பாட்டுத் திறமை நன்கு வெளிப்படுகிறது. குயில் பாட்டு, கவிதைக் காதல் பாட்டுகளைச் செவிச்சுவை உணராத கவிஞர்கள் எழுதியிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி ஒரு சந்தச் சுவை கவிதை முழுவதும் விரவியுள்ளது. வியப்பதும், ரசிப்பதும், பகிர்வதும் கவிதை உருவாகும் முறை எனக்கொண்டால், காதலற்றவனின் வெறுமை போல, சந்தச் சுவையற்ற கவிதையில் ஒரு குறை உள்ளது. விமர்சனம் எனச் சொல்லப்படும் அனைத்தும் தனிப்பட்ட ரசனை எனும்போது, மேற்கூறியதும் அதில் ஒரு பகுதியாகிவிடும். அவ்விதத்தில் பண்ணின் சுவை கொண்டு புனைந்த கவிகளான பாரதி, தாகூர் போன்றவர்கள் ஒரு படி மேல் தான்.
 
காதலையே காதலித்த மனப்பக்கும் எல்லாருக்கும் வாய்க்காது. மானிடர் என்றில்லாமல், அனைத்து உயிர்கள், மொழி, நாடு, கவிதை எனப் பலவகையான காதல்களை மண்ணில் பிறப்பது முதல் மறைவது வரை அடக்கிவிடுகிறோம். நவீனக் காதலிலும் பாரதிதான் முதல் ஜோதி.
 
 
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞனச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதி நான்.


 

11 comments:

  1. பாரதியின் குயில் பாட்டின் விளக்கத்தினைச் சொல்லுக்குச் சொல் வரிக்கு வரி அறியவும் புரியவும் விரும்புவோர் எஸ். கருணானந்தராஜா எழுதிய பாரதியின் "குயில்பாட்டின் தத்வ ரகஸ்யம்" என்னும் நூலை வாங்கிப் படிக்கவும். இந்நூல் முதலில் மணிமேகலைப் பிரசுரத்தினரால் 1999 இலும் பின்னர் அதன் மறுபதிப்பு சென்னை வானவில் பண்பாட்டு மையத்தினாரால் 2010 இலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கு பத்மசிறீ அவ்வை நடராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளதோடு வானவில் பண்பாட்டு நிறுவனர் கே. ரவி அணிந்துரை செய்துள்ளார். நூலாசிரியரை கவிப் பேரரசு வைரமுத்துவும்> இன்னும் அறிஞர்களும் தந்த வாழ்த்துரைகளும் அடங்கியுள்ளன.

    நூலில் பாரதியின் குயில்பாட்டின் முழுவிளக்கமும் அக்குவேறு ஆணிவேறாக ஆய்ந்து விளக்கப்பட்டுள்ளது.
    மேலதிக தகவலுக்கு: http://www.thamilarivu.com/newbooks.html

    ReplyDelete
    Replies
    1. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி

      Delete
    2. Please let me know if you want to get the book.:email: karunanandarajah@yahoo.co.uk

      Delete
  2. இங்கு கிடைக்குமா என்று விசாரித்துப் பார்க்கிறோம்- சென்னை வானவில் பண்பாட்டு மையத்தினரின் தொலைபேசி எண் இருந்தால் கொடுங்க, விசாரிக்கிறோம்.

    நன்றி

    ReplyDelete
  3. ராஜபாளையம் சத்திரப்பட்டியில் சுப்ரீம் பாண்டேஜ் லிமிட்டெட்டின் மானேஜிங் டிரெக்டர் திரு ராமராஜின் பாதுகாப்பில் வேண்டியளவு புத்தகங்களுண்டு. அவரது தொலை பேசி எண்: 9894757238
    அவருடன் தொடர்பு கொண்டு நான் கூறியதாகச் சொன்னால் அவர் புத்தகங்களை அனுப்பி வைப்பார்.
    வானவில் பண்பாட்டு மையத்தினரின் தொலை பேசி:24350501 அல்லது 24350506. வழக்கறிஞர் திரு ரவியவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
    சென்னை மித்திரா அச்சகத்தினரிடமும் கேட்டுப் பார்க்கலாம்:
    23723182 அல்லது 24735314.
    சத்திரப்பட்டியில் கட்டாயம் கிடைக்கும் அங்குதான் புத்தகங்களுள்ளன. நீங்கள் எனக்கு அறிவித்தால் நான் அவர்களைத் தொடர்பு கொண்டு ஆவன செய்வேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்பு கொள்கிறேங்க

      Delete
    2. பாரதியின் குயில் பாட்டின் தத்வ ரகஸ்யம்
      எஸ். கருணானந்தராஜா
      உள்ளடக்கம்
      பாரதியின் குயில் பாட்டு அவரது ஏனைய கவிதைகளுடன் ஒப்பிடுகையில் அறிஞர்களால் மிக மேலெழுந்தவாரியாக அணுகப்பட்டவொன்றா கும்.
      ஆன்ற புலவீர்! கற்பனையேயானாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
      யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

      என்ற அவரது அழைப்பு (குயில் பாட்டின் இறுதி வரிகள்) இங்கு எதிர்கொள்ளப்படுகின்றது.
      பல அறிஞர்கள் குயில் பாட்டை கடவுளைப் பற்றிய வெற்று வேதாந்தமாகவே பார்க்கின்றனர். ஆனால் அது அவரது வாழ்க்கையின் சாரத்தை வேதாந்தத்தினூடு நோக்குமொன்றாகும். அதாவது> அவரது சித்தத்தின் அந்தத்தில் தோன்றும் கடந்தகால நினைவைுகள் வேதாந்தத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படுவதே குயில் பாட்டாகும்.
      குயில்பாட்டில் அவரது இரண்டு ஜன்மங்கள் கூறப்படுகின்றன. இரண்டுமே அவரது வாழ்வின் இரண்டு காலகட்டங்களாகும். முன் ஜன்மத்தில் - அதாவது> அவர் எட்டயபுரத்தில் வாழ்ந்த முந்திய காலகட்டத்தில்> மாடன்> குரங்கன்> சின்னக்குயிலி என்னும் வேடர் மகள்> அரசகுமாரன் ஆகிய கதா பாத்திரங்களும்> மறு ஜன்மத்தில் - அதாவது> புதுவையில் அஞ்ஞாத வாசம் செய்த பிந்திய கால கட்டத்தில் மாடு> குரங்கு> குயில்> கையில் விவேக வாளேந்திய சத்திரியனான பாரதி ஆகிய கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றனர். ஒருவரின் கடந்த கால வாழ்க்கையை மனம் புத்தி சித்தம் புலன் போன்றவற்றாலேயே அசைபோட முடியுமென்பதால்:
      புத்தி> மனஞ் சித்தம்> புலனென் றறியாமல் வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென...
      என்ற வரிகள் மூலம் இப் பாத்திரங்களைப் பாரதி வேதாந்த ரீதியில் அறிமுகஞ் செய்கிறார். இங்கே மாடு புத்தியாகவும்> குரங்கு மனமாகவும்> குயில் சித்தமாகவும்> அரசகுமாரன் புலனாகவும் உருவகிக்கப்படுகின்றனர். அவர்களின் முன்ஜன்ம (முந்தையவாழ்க்கை) தோற்றப்பாடே பாட்டின் மர்மமாகும். புத்தியையும்> மனத்தையும்> சித்தத்தைம்> புலனையும் சற்று வேதாந்த ரீதியில் நோக்கி அவை மனிதவுள்ளத்தின் வேறுவேறான கூறுகள் எனவுணர்வோமாயின் குயில்பாட்டை இலகுவாகப் புரிந்துகொள்ளமுடியும்.

      Delete
  4. தொடர்ச்சி....
    குயிலும்> சின்னக் குயிலியும் பாரதியின் கவித்துவத்தின் உருவகங்களாகும்
    இக் கதையின் முக்கிய உருவகங்களான பின் ஜென்மக்; குயிலையும் முன் ஜென்மத்துச் சின்னக் குயிலியையும் முதலில் சரிவரப் புரிந்துகொண்ட பின்னரே குயிற் பாட்டினுள் ஆழ்ந்து போகமுடியும். அவ்வுருவகங்கள் பாரதியின் கவித்துவம் நிறைந்த சித்தத்தைக் குறிப்பனவாகும்.
    பாரதி தனது சித்தத்தை அதனுள் நிறைந்திருக்கும் அழகிய கவித்துவத்தைக் குயில் பாட்டின் இறுதியிலே ஆசைக்கடலில் மறைய நிற்கும் அமுதாய் தெய்வீகமாய்க் காண்பிக்கிறார். வழமையான யாப்பு மரபுகளிலிருந்து கூர்ப்பித்துத் திருந்திய தேனிலினியாளாய்க் கூறுகிறார். பராசக்தியின் அம்சமான கவித்துவப் பெண்ணரசியின்:
    “...மேனிநலத்தினையும் வெட்டினையும் கட்டினையும்……மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை கற்றவர்க்குச் சொல்வேன்: கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே பண் கூத்து எனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி அதனூடே இன்னமுதைத் தான் கலந்து காதல் வெயிலினிலே காயவைத்த கட்டியினால் மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்...”
    என்று புகழ்கிறார். இங்கே பாரதி தன் இன்கவிதைச் சாற்றில் பண்டைய தமிழ்ப் பண்களையும் கூத்து கும்மி சிந்து தெம்மாங்கு போன்ற மெட்டுக்களையும் கலந்து தந்ததால்> தான் குயிலாகவும் குயிலியாகவும் உருவகப்படுத்திய தனது கவித்துவ சித்தத்தின் வடிவத்தை மேற்கண்டவாறு விபரிக்கிறார் என்பதறிக.
    பாட்டின் முற்பகுதியில் தான் யாரெனத் பொதியமலை முனிவரான அகத்தியரிடம் குயில் கேட்கிறது. அதற்கு முனிவர் நீ:
    “...முந்து மழகினிலே மூன்று தமிழ் நாட்டில்
    யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே
    சீருயர நின்றாய்...”
    என்று> இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் சீருயர வாழ்ந்த தமிழகத்தில் பாரதி தழுவிய பண்களுக்கும் மெட்டுக்களுக்கும் இருந்த செல்வாக்கைப் புலப்படுத்துகிறார். மேலும்;:
    “...வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன் வீரமுருகன் என்னும் வேந்தன் மகளாக வந்து பிறந்தாய்...”
    என்ற வரிகளின் மூலம் முருகனின் மறுபெயரைக்கொண்ட சுப்பிரமணியமே (பாரதி) கவித்துவத்தின் தந்தை என்பதும் மறைமுகமாகக் காட்டப்படுகின்றது. பாரதியின் காலத்தில் அவரின் நவகவிதைப் போக்கினைப் பண்டிதர்கள் விமர்சித்ததன் காரணத்தினால் அது வெறும் யாப்பிலக்கண அறிவை மட்டும் சாராது உள்ளார்ந்த சித்தத்தின் ஈடுபாட்டினால் வெளிப்பட்டுவரும் தெய்வீகத் தீம்பாடல்கள் என்பதை வலியுறுத்த குயில்பாட்டு முழுவதிலும் குயிலும் குயிலியும் தனது கவித்துவ சித்தமேயென்பதைப் பாரதி தெளிவாக உணர்த்திச் செல்கிறார். சின்னக்குயிலி என்னும் பெயருக்கும் பாரதியின் சுயசரிதையெனக் கணிக்கப்படும் சின்னச்சங்கரன் கதைப் பாத்திரப் படைப்புக்குமிடையேயுள்ள பெயரொற்றுமையையும் இங்கு புரிந்து கொள்ளலாம்.
    பாட்டின் ஏனைய கதா பாத்திரங்கள்:
    குயில் பாட்டில் வரும் இரு ஜென்மங்களிலும்; மாடும் மாடனும்; பாரதியின் புத்தியையும் (அறிவு) அத்துடன் அவரை ஆதரித்துத் தொழில் கொடுத்த அரசன் - வெங்கடேசரெட்டப்ப பூபதியையும்> குரங்கனும் குரங்கும் பாரதியின் தமிழாசிரியர்பதவியுடன் கூடிய பண்டிதமனத்தையும் அத்துடன் அரசவையிலிருந்த பண்டிதர்களையும் (கவிராயர்கள்)> குயிலும்> சின்னக்குயிலியென்னும் வேடர்மகளும் மேற்குறிப்பிட்டதுபோல பாரதியின் சித்தத்தையும் அதில் மிளிர்ந்த கவித்துவத்தையும்> கையில் வாளேந்திய சத்திரியனான பாரதியும்> அரசகுமாரனும் பாரதியின் தாகமான தேச விடுதலை என்னும் அரசியல் ஈடுபாட்டையும் (சத்திரியதர்மம்) அதே வேளை அவரது அரசியல் சார்ந்த பத்திரிகாசிரியர் தொழிலையும் உருவகம் செய்கின்றனர். குயிலுக்கு அதாவது> பாரதியின் கவித்துவம் நிரம்பிய சித்தத்திற்கு பழைய ஜன்மத்தை (வாழ்வை) நினைவு படுத்தும் தென்பொதிகை அகத்தியர் தமிழின் உருவகமாகும்.
    மேற்குறித்த பாத்திரங்கள+டே எவ்வாறு பாரதியின் வாழ்வு வேதாந்தமானது என்பதைச் சற்று நோக்கி விட்டு மேற்சொல்வோம். ....தொடரும்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ச்சி....
      பாரதி> குயிலாகிய கவித்துவ சித்தம் இன்பவெறியும் துயரும் இணைந்த காதல் காதல் பாட்டைப் பாடும்; காட்சியை கனவா நனவா என்றறியாது> அதைப் பின்வருமாறு விளக்குகிறார்.
      “...நானுமெனதுயிரும்> நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்>
      மாயக்குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்
      சாயைபோலிந்திர மாசாலம்போல் வையமுமாய் மிஞ்சி நின்றோம்...
      ...(வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால்>
      புத்தி> மனம்> சித்தம்> புலனென்றறியாமல்
      வித்தைசெயுஞ் சு+த்திரத்தின் மேவுமொரு பொம்மையென...”

      என்ற வரிகளைச் சற்று ஆழ்ந்து நோக்குவோம்.

      ஆத்மனின் அந்தக்கரணங்களை மனம் புத்தி சித்தம் அகங்காரம் என நான்காய் வகுப்பர். குயில் பாட்டில் அகங்காரத்தை தான் எனும் அகந்தையுள்ள உயிரின் கூறாகவும் அதைக் கையில் நீண்ட வில்லோடு சத்திரியவுணர்வும் ராஜச குணமும் நிரம்பிக் காதல் வயப்பட்டு நிற்கும் மன்மதனான புலனாகவும் பாரதி காட்டுகிறார். சித்தமாம் மாயக்குயில் அதே காதல் அழகுணர்ச்சிகளுடன் கூடிய தீம்பாடல் பாடும் கவித்தும் நிறைந்தது. ஏனைய இரண்டும் புத்தியும் மனமுமாகும். அவ்வகையில:;

      இந்திரன் மாயாஜாலம் (இந்திரஜால வித்தை) காட்டினால்> இந்திரனின் தோற்றம் (சாயை) உண்மையாகவும்> அவன் காட்டும் மாயா ஜாலம் (மாசாலம்) பிரமையாகவும் (வேடிக்கை-மாயை) தெரியுமெனக் கருதின்> அவ்வாறே பாரதிக்கும் மனதினதும்> புத்தியினதும் பிரமையாகிய இவ் வையகமும் அதன் லெளகீக இயக்கங்களும் மாயா ஜாலம் போன்ற வேடிக்கையாகத் (மாயை-அசத்) தெரிகின்றன. அதே வேளையில்> நான் என்னும் அகங்காரத்துடன் (ஆணவம்) கூடிய புலனும்> ஆத்மனும் (நானுமெனதுயிரும்)> ஆத்மனின் சித்தத்திலே நீளச்சிலை (கரும்பு வில் அத்தோடு தர்மத்தை நிலை நட்டும் சத்திரியனின் வில்) கொண்டு நிற்கும் மன்மதனாகிய காதல்> அழகுணர்ச்சிகளும்> மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டுமாகிய கவித்துவமும்> கவிதையும் இந்திரனின் சாயை போன்று (சாயை போலிந்திர)> அஃது> உண்மையாகத் (சத்தாக) தென்படுகின்றன. ஆக> இவ் அசத்தும்> சத்தும் சேர்ந்து மன்மதனார் விந்தையால் (உயிர்> உடற்கலப்பால்) சதசத்தாகிய> புத்தி>மனம் (அசத்து)> சித்தம்> புலன் (சத்) என்று அறியாமல் வித்தை செயும் சூத்திரம் உள்ளே இருக்க> அதை மேவியவோர் பொம்மையுருவாய் ஆட்டுவித்தால் ஆடும் தன் மனிதவுரு இயங்குகின்றது என்பதையே> பாரதி கோட்பாட்டு ரீதியில் மேற்கண்ட வரிகள் மூலம் முன் வைக்கிறார்.
      மாடனுக்கும் சின்னக்குயிலிக்கும் இடையே ஏற்பட்ட காதல்
      மாடன்> மாடு (எட்டப்பமன்னன்> புத்தி)

      பாரதியை அவரது ஊரைச்சேர்ந்த வெங்கடேசரெட்டப்ப மன்னர் - (இவர் ஆங்கிலேயரை எதிர்த்த கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் வம்சத்தவர்) தனது ஆஸ்தானத்திலமர்த்தி ஆதரித்தமை மாடனுக்குக் குயிலிமீது ஏற்பட்ட காதலாற் குறிக்கப் படுகின்றது. இது:

      “…மாமன் மகனொருவன் மாடனெனும் பேர் கொண்டான்
      பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு
      நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாக...”

      என்ற வரிகள் மூலம் குறிக்கப்படுகின்றது. இங்கு பொன் - பணம்> மலர் – ஆடல் மகளிர். புதுத்தேன் - மது எனப் பொருள்படுகின்றது
      ....தொடரும்

      Delete
    2. தொடர்ச்சி....

      இன்னொரு வகையில் குயிலிக்கும் மாடனுக்கு மிடையேயான காதல்> கவித்துவத்திற்கும்> அறிவுக்கும் (புத்திக்கும்) இடையே ஏற்படக்கூடிய வலுவற்ற தொடர்பையும் குறிக்கின்றது.
      “அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தைக் காணமுடியாத வெற்று விமர்சகர்களே அறிவியற் கல்வியாளர்கள் என்பது பாரதியின் கருத்தாகும்.”
      அடுத்ததாக> குரங்கனின் தந்தை (மொட்டைப் புலியன்) குயிலியைக் குரங்கனுக்கு மணம்பேசியமை> ராமநாதபுர சமஸ்தானம் மதுரைச் சேதுபதி உயர் நிலைப் பள்ளியில்; பாரதிக்குத் தமிழாசிரியர் (பண்டிதர்) வேலை அளித்தமையைக் குறிக்கின்றது. இதையறிந்து எட்டப்ப மன்னன் சினந்தபோது:
      “...நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும்> கட்டுப்படி அவர்தங் காவலிற்போய வாழ்ந்தாலும் மாதமொரு மூன்றில் மருமஞ் சில செய்து… வந்திடுவேன்...”
      என்று மன்னனைச் சமாதானஞ் செய்தமை குயில் பாட்டில் குறிக்கப்படுகின்றது.
      அரசகுமாரனுடன் குயிலி காதல் கொண்டமை> எட்டப்ப மன்னனின் இலக்கிய ரசனைகளுக்கேற்ப நடக்காது அவனது தொடர்புகளை முறித்துவிட்டு> தமிழாசிரியர் பதவியையும் மூன்று மாதத்தில் து}க்கியெறிந்துவிட்டு தேசவிடுதலையென்ற சத்திரிய தர்மத்தின் மீது அதாவது> அரசியலின்மீது பாரதி நாட்டங்கொண்டதையும் அதனால் பத்திரிகாசிரியரானதையும் குறிக்கின்றது.
      அரசகுமாhரனதும்> குயிலியினதும் இறப்பு> அரசியலில் முற்றுமுழுதாக ஈடுபட முடியாமல் பத்திரிகாசிரியர் தொழிலையுங் கைவிட்டுப் புதுவையில் பாரதி அஞ்ஞாத வாசம் செய்ய நேர்ந்தமையைக் குறிக்கின்றது. இக் காலகட்டத்தில் அவராற் தேச எழுச்சிப் பாடல்களைப் பாடமுடியாமலோ அல்லது அவை பிரபலமடைய முடியாமலோ போன நிலை பாடலில் வெளிப்படுத்தப் படுகின்றது. இது இடைக்காலத்தில்> அதாவது குயில் பாட்டுப் பாடப்பட்ட காலகட்டத்தில்; அவருக்கேற்பட்டவோர் இக்கட்டான நிலையாகும். பின்னர் புதுவையிலிருந்தவாறே முழு வீச்சில் பத்திரிகைத் தொழிலூடாக அவர் அரசியலில் ஈடுபட்டார் என்பதை யாவருமறிவர்.
      மாடனும்> குரங்கனுமே அரசகுமாரனதும்> குயிலியினதும் இறப்புக்குக் காலாகின்றனர். இது எட்டப்ப மன்னனுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாலும்> தமிழாசிரியர் வேலையைக் கைவிட்டதாலும ஏற்பட்ட வறுமை நிலையினால் தனது கவித்துவத்தைப் பாவித்து மக்களை விழிப்படையச் செய்து முற்றுமுழுதாக அரசியலில் ஈடுபட முடியாமற்போன பாரதியின் நிலையைக் காட்டுவதாயுள்ளது. மறுஜன்மத்தில் (பிற்காலத்தில்) குரங்கு-மனம்> மாடு-புத்தி> குயில்-கவித்துவ சித்தம்> சத்திரியனான பாரதி-புலன் ஆகியோரால் கடந்த கால நிகழ்வுகள் நினைவுகூரப்படுகின்றன.
      குக்குக்கூ என்று குயில்பாடும் பாட்டினிலே
      தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே
      அந்தப் பொருளை அவனிக்குரைத்திடுவேன்
      விந்தைக்குரலுக்கு மேதினியீர் என் செய்கேன்

      என்ற வரிகளிலும்>
      வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
      மானக் குலைவும் வருத்தமும் நான் பார்க்காமல்
      உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்
      பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்

      என்ற வரிகளிலும்> பாரதி தன் கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட துயரசம்பவங்களை உலகிடம் சமர்ப்பிக்கிறார்.
      பாரதியின் நவகவிதைப் போக்கிற்குப் பண்டிதர்களிடம் ஏற்பட்ட எதிர்ப்பை எதிர்கொள்வதே குயிலின் காதல்> காதல் பாட்டின் முக்கிய நோக்காகும். தற்காலத்தில் பலர் காதல் காதல் பாட்டின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு அப்பாடல் சாதாரண மனிதக் காதலுக்குப் பாரதி காட்டிய உச்சவுணர்வின் வெளிப்பாடாகப் பொருள் கொள்கின்றனர். ஆனால் அதன் முக்கிய பொருள் அதுவன்று. குயிலின் பாடலிலே இன்பவெறியும் துயரும் நிறைந்திருப்பதாகப் பாரதி கூறுகிறார்.
      ....தொடரும்

      Delete
    3. தொடர்ச்சி....

      தனது தனித்துவமான கவித்துவத்தின் மீது தனது புலனாம் தேசவிடுதலைக்கான காதல் போயில் சாதல்> கவியின்பம் பேரருட்கொடை> அதுவே பேரொளி> ஒளிபோமாயின் இருளே> கவியின்பத்திற்கு ஓர் எல்லை கண்டு இலக்கணம் வகுக்க முற்பட்டால் துன்பம்> அப் பாடல்களிலுள்ள நாதத்தேயோர் நலிவுண்டாயின் சேதம்> தாளத்திற்கோர் தடையுண்டாயின் கூளம்> பண்ணிற்கேயோர் பழுதுண்டாயின் மண்ணே> தன் பாடல்களால் வரும் புகழுக்கேயோர் புரையுண்டாயின் இகழே> நாட்டுவி விடுதலையென்னும் சத்திரியப்புலனாம் குமரனோடு என் கவித்துவம் கூடும் கூடலே கூடல்> அந்தப் புலன் பிரிந்து போய்விட்டால் வாடல்> என் உறுதி போய்விட்டால் இறுதி> குழலினுமினிய என் கவிதைகளில் இலக்கண வரம்புகள் என்னும் கீறல் விழுந்தால் விழலே
      என்று> குயிலின் பாட்டில் (காதல் காதல் காதல்...) பாரதி தனது கூத்து> கும்மி> சிந்துப் பண்களியைந்த நவயுகக் கவிதைகளின் சிறப்பைக் கூறுகிறார். அத்தகைய கவிதைப் போக்கை இலக்கண வரம்புகளுக்காக சேதமாக்கவோ> கூளமாக்கவோ> மண்ணாக்கவோ முடியாதென்கிறார்.
      ஆனாற் கவிராயர்களாகிய (குரங்குரு) பண்டிதர்களோ> அவரது கவிதைகளை வாயாரப் புகழ்வதுபோல் நையாண்டி செய்து ஆவியுருகுதடி ஆஹா> ஆஹா என் பதுவும்> கண்ணைச் சிமிட்டுவதும்> காலாலும்> கையாலும் மண்ணைப் பிறாண்டி எங்கும் வாரியிறைப்பதுவுமாய் (13) இலக்கணச் சேற்றை வாரியிறைக்கிறார்கள். மன்னனும் பண்டிதர்களின் ஆதிக்கத்துக் குட்பட்டு பாரதியைத் தாழ்த்தி பண்டிதர்களைத் து}க்கிக் கொண்டாடுகிறான். ஆனால் உறுதியுடையப் போவதில்லை. அதற்கேயோர் உடைவுண்டாயின் இறுதி. கூடிச்செல்லும் குமரனாம் இளமையழகு என் பாட்டிற் போய்விட்டால் வாடல். வேய்ங்குழலின் நாதத்தையொத்துப் பண்ணியைந்த என்பாடல்களில் இலக்கண வரம்பு என்ற கீறல் விழுந்தால் விழலன்றோ என்று மிக ஆழமான குரலிற் பாடுகிறார்.
      ஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல்
      தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்
      சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு
      முற்றும் வயிரிகளாய் மூண்ட கொடுமையையும்
      இத்தனை கோலத்தினுக்கும் யான் வேட்கை தீராமல்
      பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும்...

      என்ற வரிகள் மூலம் பாரதியின் பண்டிதத்தன்மை கொண்ட மனமும் (சொற்றைக் குரங்கு)> அறிவெனும் புத்தியும் (தொழுமாடு) ஒரு விடயத்தைப் பொருள் செய்து பாட்டியற்ற விடாமல் இலக்கணத்தடைகளை ஏற்படுத்தியும்> அவரது நவகவிதை ஈடுபாடு ஒரு வேட்கையாய் அவருட் கொழுந்து விட்டெரிந்த நிலை காட்டப்படுகின்றது.
      காதல் காதல் பாட்டின் இன்பமயமான வேதாந்தப்பொருள் தொடரும் விரிவான ஆய்வில்; விளக்கப்பட்டுள்ளது.
      இவை தவிர> குயில்பாட்டில் பாரதி கோட்பாட்டு ரீதியில் முன்வைக்கும் விடயங்களைப் பின்வருமாறு கூறலாம்.
      கவித்துவம் ஒருவருக்கு அழிக்கப்படும் அருட்கொடை. அது பிறப்புக்கள் தொறும் தொடரும். ஆகவே அது உண்மைப் பொருள் (சத்). கவித்துவசித்தத்தில் செயல் சிந்தனையுட்பட்ட புலனை ஒன்றிணைக்கைையில் அபேதநிலை தோன்றுகின்றது.
      மேற்கண்ட பாரதியின் சிந்தனைக் கோட்பாட்டிற்கும்> அவரது வாழ்க்கைப் பின்னணிக்கும் உரிய குயில் பாட்டின் ஆதாரங்களே இவ் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. பாரதியின் குயில் பாட்டை வாசித்துச் சிந்தித்து அதன் மர்மத்தையறிய ஆர்வமுறுவோர்க்கே பெரும்பாலும் இவ்வாய்வு உதவும். ஆழ்ந்து செல்வோர் தம் கருத்துக்களைக் கூறும்போது பாராட்டுகள் மனதை மகிழ்விக்கும்> விமர்சனங்கள் அறிவை உயர்த்தும். ஆகவே முடிந்தாற் தொடர்புறுமாறு அன்புடன் வேண்டுகிறேன். மிகுதிக்கு நூலுட் செல்க
      நன்றி
      EMail: karunanandarajah@yahoo.co.uk

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...