A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

25 Dec 2012

பன்னிரு சதகத் திரட்டு

தொன்மை என்றில்லை, பண்டைதமிழ் இலக்கியத்தில்கூட பெரிய அளவு பயிற்சி கிடையாது. ஏதோ பதம் பிரித்து வாசிக்கத் தெரியும், ஆனாலும்கூட முன்னே பின்னே பார்த்திருக்காத சொற்களைப் பதம் பிரித்தது சரிதானா என்பது சந்தேகமாகத்தான் இருக்கும், எப்படியும் அதன் பொருள் விளங்குவதில்லை. ஆனால், நாஞ்சில் நாடன் நம் மரபைச் சேர்ந்த தமிழ் நூல்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருவதை வாசித்த காரணத்தால் அவற்றை முகர்ந்தாவது பார்க்கும் ஆசை உண்டு. அதனால்தான் 1948ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட "பன்னிரு சதகத் திரட்டு" என்ற தொகுப்பைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் வாசிப்பில் வானின் கீழுள்ள எல்லா விஷயங்களையும் நம் புலவர்கள் இறைவனுக்கான தோத்திரங்களாக்கி இருக்கின்றனர் என்ற எண்ணம் வருகிறது. சிவனாகட்டும் விஷ்ணுவாகட்டும் செக்யூலர் சாமிகளாகவே இருக்கின்றனர்.


பன்னிரு சதகங்களிலும் பேசப்படும் விஷயங்கள் பலதரப்பட்டவை. அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு பாடல் மட்டும் மேற்கோள் காட்டுகிறேன்.

1. குமரேச சதகம் - இயற்றியவர் திருப்புல்வயல் குருபாத தாசர்.

பல சதகங்களிலும் வருணப் பாகுபாடு இருக்கிறது என்பதும் அது போற்றிப் பாடப்படுகிறது என்பது வருத்தத்துக்குரிய விஷயம். குமரேச சதகம், காப்பு, அவையடக்கம் என்று துவங்கி நூல் பகுதியில், குமரேச மகிமை, அந்தண ரியல்பு, அரச ரியல்பு, வணிக இயல்பு, வேளாள ரியல்பு, பிதாக்கள் என்று துவங்கி, ஒன்றையொன்று பற்றியிருப்பன, இவ்ர்க்கிவர் தெய்வமெனல், இவர்க்கு இதில் நினைவெனல், இன்னவர்க்கு இன்னதில்லை யெனல் எனத் தாவி, தகாச் செயல்கள், நல்லோர் முறைமை, அடைக்கலங் காத்தல், யோக்கியா யோக்கியம், பெரியோ ரியல்பு, நூலின் பயன் என்று முடிகிறது.

இதில் ஒரு பாடல்: கால மறிதல்

காகம் பகற்காலம் வென்றிடுங் கூகையைக்
      கனகமுடி யரசர் தாமுங்
   கருதுசய காலமது கண்டந்த வேளையிற்
      காரிய முடித்து விடுவார்
மேகமுங் கார்கால மதுகண்டு பயிர்விளைய
      மேன்மேலு மாரி பொழியும்
   மிக்கான அறிவுளோர் வருதருண காலத்தின்
      மிடியாள ருக்குதவு வார்
நாகரிக முறுகுயில் வசந்தகா லத்திலே
      நலமென் றுகந்து கூவு
   நல்லோர் குறித்ததைப் பதறாம லந்தந்த
      நாளையின் முடிப்பர் கண்டாய்
வாகனைய காலைகன மாலைபுல் லெனுமுலக
      வாடிக்கை நிசமல்ல வோ
   மயிலேறி விளையாடு குகனேபுல் வயனீடு
      மலைமேவு குமரேச னே.

2. அறப்பளீசுர சதகம் - இயற்றியவர் அம்பலவாணக் கவிராயர்

இதுவும் வழக்கம்போல காப்பில் துவங்கி உயர் பிறப்பைப் பேசுகிறது - "கடல் உலகில் வாழும் உயிர் எழுபிறப்பினுள் மிக்க/ காட்சி பெரும் நர சென்மமாய்க்/ கருதப் பிறத்தல் அரிது அதினும் உயர்சாதியில் / கற்பு வழி வருதல் அரிது". சாதி வெறியை புலவர்களும் பாடிப்பாடி வளர்த்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. உயர் பிறப்புக்கு அப்புறம் இது வேறு ட்ராக்கில் மனையாட்டியின் சிறப்பு, நன்மக்கட் பேறு, சகோதர ரொறுமை, சற்குரு வியல்பு, நன்மாணாக்க ரியல்பு என்று பிரிந்து திருமால் அவதாரம், சிவமூர்த்தி, கவி வணக்கம் என்று முடிகிறது. ஒரு மாறுதலுக்கு மறையோர் சிறப்பு, அரசர் சிறப்பு, வைசியர் சிறப்பு என்று பாடி வேளாளர் சிறப்பையும் கடைசியில்தான் பாடுகிறார் (பாடல்கள் 81 -84)

இதில் ஒரு பாடல்: கவிஞர் வறுமை

எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை
      யிணையிலாச் சேட னென்று
   மீவதில் லாதகன லோபியைச் சபையதனி
      லிணையாகக் கர்ண னென்றும்
அழகற்ற வேகுகோர ரூபத்தை யுடையோனை
      யதிவடிவ மார னென்று
   மாயத மெடுக்கவுந் தெரியாத பேடிதனை
      யாண்மைமிகு விஜய னென்றும்
முழுவதும் பொய்சொல்லி யலைகின்ற வஞ்சகனை
      மொழியரிச் சந்த்ர னென்றும்
   மூதுலகில் லிவ்வணஞ் சொல்லியே கவிராஜர்
      முறையின்றி யேற்ப தென்னோ?
அழலென வுதித்துவரு விடமுண்ட கண்டனே!
      அமலனே! அருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
      ரறப்பளீ சுர தேவனே.

3. கயிலாசநாதர் சதகம் - இயற்றியவர் சிதம்பரம் பிள்ளை

செய்யுள் வகை என்று தனியாகவே பாடிவிடுகிறார் புலவர் - "நால்வகைச் சாதியும் பலவகையி னீதியொடு/ நாற்கவிகள் சொலு முறைமையு..." என்று. இதையெல்லாம் படிக்கும்போதுதான் பாரதி செய்தது எவ்வளவு பெரிய புரட்சி என்று தெரிகிறது, ஆயிரம்தான் சொன்னாலும் அவனும் ஒரு புலவன்தானே? இந்த சதகங்களை ஒருமாதிரியாக do and don'ts for dummies என்று வகைமைப்படுத்தலாம் என்றாலும் இந்த சதகம் கொஞ்சம் ஓவராகவே போய் விடுகிறது - கருடதெரிசன பலன், இராகம் முப்பத்திரண்டாவன, வாத்தியங்களாவன, தொண்ணூற்றாறு தத்துவம் என்று என்னென்னவோ. இடையில் இப்படி ஒரு முத்து:

இப்பத்திரஞ் செல்லா தெனல்

சகமதனின் முப்பதாண் டுக்குமேற் பட்டகைச்
      சாதன மேனும் பத்திரந்
   தந்திட்ட தொருமுதற் பொருளுக்கு வட்டியது
      சமமாகு காலமளவுந்
தகவுறுந் திறமுடைய னாகியே தனிகன்மிகு
      தனமிகுஞ் செல்வனாகிச்
   சமீபத் திருந்துவாழ் கின்றகட னாளியைச்
      சற்றேனுங் கேளாமலுந்
துகளிலாச் சிட்டனைக் காட்டாம லும்மவன்
      சும்மா விருந்து விடிலோ
   தோன்றுமப் பத்திர நீதித் தளத்தினிற்
      றோல்வியுற் றழியுமெனவே
ககனத்தர் துதிமுநிவ ரகமுற் றுரைத்தனர்கள்
      கற்பக விராச மேவுங்
   கங்கை புனை யீசனே மங்கைமகிழ் நேசனே
      கயிலையங் கிரிவாசனே.
--- கயிலாசநாதர் சதகம், 21 (பக்கம் 135)

4. அண்ணாமலை சதகம் - இயற்றியவர் திருச்சிற்றம்பல நாவலர்

விநாயகர் காப்பு, கடவுள் வாழ்த்து, திருக்கோவலூர் ஸ்தலபெருமை கூறியது, அபிஷேக விதி கூறியது, அருள் பெறுமாறு எங்ஙனம் என இரங்கல் கூறியது என்று பக்திப் பழமாக ஆரம்பிக்கும் இந்த சதகம் சீக்கிரமே வர்ஜா வர்ஜியமில்லாமல் என்னென்னவோ பாடப் போய் விடுகிறது. எல்லாவற்றுக்கும் அண்ணாமலைத் தேவனே என்ற அழைப்பு வேறு - இந்தப் பாடலைக் கேட்க  அண்ணாமலைத் தேவனை ஏன் அழைக்கிறார் புலவர் என்று ஏதாவது புரிகிறதா என்ன என்று பாருங்கள்:

கலவியிற் கொக்கோக லீலை கூறியது

நாடுழட லிழையுமா லிங்கன மதோரைந்து
      நண்ணுமித ழதரபாண
   நல்லசுவை பதினொன்று மமிர்தநிலை பதினைந்து
      நகுநகக் குறிகளேழுங்
கூறுதந் தக்குறிக ளெட்டுமுயர் பரவைபோற்
      குரலோசை யெட்டுமிருகைக்
   குவிதாட னங்களிரு நான்குமுரை கரணங்கள்
      கூறுநாற் பத்தெட்டுமே
யூடுகல விப்போக மெய்ம்முயக் கீரெட்டு
      முறழுநூற் றிருபதுடனே
   யோராறு மொழிகின்ற கொக்கொக விதமறிந்
      தூடலோ டினிதாகவே
யாடவரு மங்கையரு மனுபவித் திடலின்ப
      மருள்பெறு வசந்தராயர்
   அண்ணாவி னிற்றுதிசெ யுண்ணா முலைக்குரிய
      வண்ணா மலைத்தேவ தேவனே
--- அண்ணாமலைச் சதகம், 90 (பக்கம் 237)

(அதரபான நல்ல சுவை பதினொன்றாம்! புலவர்கள்.)

5. அவையாம்பிகை சதகம் - இயற்றியவர் மாயூரம் நல்லதுக்குடி கிருஷ்ணையர்

பாடல்களுக்கு உபதலைப்புகள் இடாத காரணத்தால் இந்த சதகம் குறித்து பறவைப் பார்வை கொடுக்க வழியில்லை. ஒரு பாடலையாவது மேற்கோள் காட்டலாம் என்றால் உண்மையாகவே பக்தியாக எழுதியிருக்கிறார், நமக்கு அதில் சுவாரசியமில்லை - எனவே நான்கு அடிகள் மட்டும் காட்டுக்கு:

கள்ள மயக்கந் தொடராமற் கவலைப்
      பிணிகள் படராமற்
   கனவை நிஜமாய்த் தொடர்ந்தடர்ந்து கரைய
      விழியின் புனலாறாய்த்...
- அவையாம்பிகை சதகம், 30 (பக்கம் 263)

6. திருவேங்கட சதகம் - இயற்றியவர் வெண்மணி நாராயண பாரதி

"தடவரை யதன்மீது விளையினுஞ் சோளமது
      சன்னசம்பா வாகுமோ
   சந்ததமும் வாடா திருந்தாலு மெட்டிமலர்
      சாதிமல் லிகையாகுமோ..." (பாடல் 13, பக்கம் 310)

என்று "சாதி முதலானவைகளின் குணமே சிறந்ததெனல்" என்ற உபதலைப்பில் படு டெர்ரராகப் பாடியிருந்தாலும் புலவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வும் கற்பனையும் இருந்திருக்கிறதென்பது புலனாகிறது. பின்வரும் பாடலை ஆம்னிபஸ் குழுவின் மகத்தான மருத்துவரும் காந்தியின் பெயரருமான மரு திரு சுநீல் கிருஷ்ணன் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்:

ஈனர் வயித்தியனுக்குச் செய்யும் முறைமை

சேர்க்கின்ற கனமோக முற்றால் வயித்தியன்
      றெய்வமாங் கேட்டtதெல்லாந்
   திரள்கொடுப் போமென்பர் தீருமிப் பிணியென்று
      செப்பினா லன்றுகுருவாம்
பார்க்கின்ற குளிகையது தந்தபின் தந்தையாம்
      பாதிலகு வானபின்பு
   பண்பான துணைவனா ரோக்கியஞ் செய்தபின்
      பார்க்கின்ற மைத்துனனுமாம்
ஏர்க்கின்ற மற்றைநா ணேயன்மறு நாளினி
      லிசைந்தகட னாளிமறுநா
   ளெதிர்வரிற் பகையாளி யாகுமிப் படியென்னு 
      மீனர்சில ருண்டுகண்டாய்
வார்க்கின்ற தானமொடு வளர்கின்ற வள்ளலே!
      மணவாள நாராயணன்
   மனதி லுறை யலர்மேலு மங்கை மணவாளனே
      வரதவெங் கடராயனே!
--- திருவேங்கட சதகம், 69 (பக்கம் 343)

7. தண்டலையார் சதகம் - இயற்றியவர் படிக்காசு புலவர்

சொல்வனம் இணைய இதழில் நாஞ்சில் நாடன் இந்த சதகம் குறித்து எழுதியுள்ளார்: "வெண்பாவிற் புகழேந்தி என வரும் தனிப்பாடலில், “பண்பாகப் பகர் சந்தம் படிக்காசு அலாது ஒருவர் பகர ஒணாதே’ என்று முடிவதில் இருந்து படிக்காசுப் புலவர் சந்தம் பாடுவதில் வல்லவர் என்பது அறிவோம்." சொல்நயம், பொருள்நயம், படைப்பூக்கம், கற்பனையாற்றல் என்று அருமையாக பண்டை இலக்கியங்களை ரசித்துப் பகிர்ந்து கொள்கிறார் நாஞ்சில் நாடன். நமக்கு அவ்வளவு தெரியாது எனினும் இந்தப் பாடல் எவ்வளவு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்பது புரியவே செய்கிறது, உண்மையாகவும் இருக்கிறது என்பதுதான் வருத்தம், இந்த விஷயத்தில் புலவர் வாக்கு பொய்த்திருக்கலாம்:

பணமே எல்லாவற்றுக்கும் பிரதான மென்பது

பணந்தானே யறிவாகும் பணந்தானே
      வித்தையுமாம் பரிந்து தேடும்
பணந்தானே குணமாகும் பணமில்லா
      தவர்பிணமாம் பான்மை சேர்வர்
பணந்தானே பேசுவிக்குந் தண்டலைநீ
      ணெறியாரே பார்மீ திற்றான்
பணந்தானே பந்தியிலே குலந்தானே
      குப்பையிலே படுக்குந் தானே
---  தண்டலையார் சதகம், 72 (பக்கம் 389)

8. அருணாசல சதகம் - இயற்றியவர் காஞ்சிபுரம் வித்வான் சபாபதீ முதலியார்

கேலி பேசவோ, அறச்சீற்றம் கொள்ளவோ இதில் எதுவும் இல்லை. உருக்கமான பக்திப் பாடல்கள் சான்றுக்கு ஒன்று:

பொய்யானதே குடிகொண்டது
      புழுவானதே நெளிகின்றது
சையோகமே விழைகின்றது
      சவமாகிமேல் விழுகின்றது
மெய்யானதிங் கிதைநாயினேன்
      வீணேசுமந் துழல்கின்றிலேன்
ஐயாவுண தருள்வேண்டினேன்
      அருணாசலா! அருணாசலா!
--- அருணாசல சதகம், 77 பக்கம் 426


9. எம்பிரான் சதகம் - இயற்றியவர் பூதூர் கோபாலகிருஷ்ண தாசர் அவர்கள்

வைணவ அடியார் பெருமை பேசும் இனிய பாடல்கள். இது நாமனைவரும் அறிந்த கதை:

மன்னனைப் பாடாமற் போகின்றே னீயும்
      வாவரி யேன்றழைத்த புலவன் பின்னே
பன்னகப்பாம் பணைசுருட்டிக் கொண்டே யேகிப்
      பத்துக்கொ ளென்றமட்டிற் படுத்துக் கொண்டாய்
சொன்னவண்ணஞ் செய்தபெரு மாளே யென்ற
      சுரர்துதிக்கக் கச்சியில்வீற் றிருக்கின் றாய்நீ
என்னுயிரு மென்னுணர்வு மெல்லா நீயே
      இறைவாநா ராயணனே யெம்பி ரானே!
- எம்பிரான் சதகம், 61 பக்கம் 455

10. கோவிந்த சதகம் - இயற்றியவர் நாராயண பாரதியார்

உபதலைப்புகளைப் பார்க்கும்போது புலவர் அந்தகால தினத்தந்தி தினமலர் நிருபராக இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் வருகிறது. ஒவ்வொன்றும் முட்டியால் மூக்கில் குத்திய மாதிரி கண்ணைக் கவர்கின்றன- கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி, அயன் கணக்கு யாருக்கும் தப்பாது, வெள்ளாட்டின் மேல் சன்னதம் வந்தால் விழுந்து விழுந்து கும்பிட வேண்டும்!

இது பாருங்கள், ஆளை விட்டா போதுமடா சாமீ, என்கிறார் நாராயண பாரதி.

உடும்பு போனாலும் போகட்டும், கையை விட்டாற் போதும்

அடும்பழி காரனை வெட்டாமல்
      மன்னித் தனுப்பிவிட்டால்
தொடும்பழி பேச வழக்குமுண்
      டோதொடர்ந் தேபிடித்த
உடும்பது போயினும் போகட்டுங்
      கைவிடென் ருண்மைசொல்வோர்
கொடும்பழி யேன்சுமப் பாரச்சு
      தாநந்த கோவிந்தனே!

11. தொண்டை மண்டல சதகம் - இயற்றியவர் படிக்காசு புலவர்

இனிய தமிழில் தொண்டை மண்டலச் சிறப்பு.

தேர் கொடுத்தான் தலை கொடுத்தான் உதை கொடுக்க மார் கொடுத்தான் -  தமிழுக்கு தானும் #365process கொடுத்தான் ஆம்னிபஸ் பதிவர் திரு சத்ய நாராயணன், தொண்டை மண்டலவாசி. எனவே, அருமை நண்பருக்கு படிக்காசுப் புலவரின் இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்.

தேர்கொடுத் தோனும் பரிகொடுத்
      தோனுந் திருமனையிற்
றார்கொடுத் தொனுந் தலைகொடுத்
      தொனுந் தமிழுக்கா
வூர்கொடுத் தொனு முயிர்கொடுத்
      தோனு முதைகொடுக்க
மார்கொடுத் தோனு மனைவோரு
      ளார்தொண்டை மண்டலமே.
- தொண்டை மண்டல சதகம், 93, பக்கம் 534

12. வடவேங்கட நாராயண சதகம் இயற்றியவர் - திவ்யகவி நாராயண தாசரவர்கள்.

வைணவம் தமிழ் பெற்ற கொடை. இந்தத் தொகுப்பில் உள்ள சதகங்களில் பலவும் சாதி மேட்டிமைத்தனத்தை அவ்வாறு அறியாமல் போற்றிப் பாடியவை, அவற்றின் தமிழ் மிகச் சிறப்பாக இருக்கிறது, ஆனால் சதகத்தின் இந்தப் பாடலைப் பாருங்கள், நாம் குறையொன்றும் இல்லாமல் இதை வாசித்து மகிழ முடிகிறது - உயர்வு தாழ்வற்ற மனிதனைப் பாடும்போதுதான் தெய்வத்தைப் பாடுவதாகவும் ஆகிறது.

எல்லாமுன் னகரத்துளே
      யென்னோடுமங் குறைகின்றபேர்
அல்லதுவே றில்லாமையா
      லனைவர்க்குமோ ரருளல்லவே
வல்லாருளார் மாட்டாருளார்
      வறியாருளார் வாழ்வாருளார்
நல்லாருளார் பொல்லாருளார்
      நாராயணா நாராயணா
- வடவேங்கட நாராயண சதகம், 6, பக்கம் 545

பன்னிரு சதகத் திரட்டு (1948),
B இரத்தின நாயகர் & ஸன்ஸ், 
சென்னை.

3 comments:

  1. சுவாரஸ்யமான தொகுப்பு ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ரசித்தமை குறித்து நன்றிகள்... தொடர்ந்து வாசிப்பமைக்கும்.

      நன்றி.

      Delete
  2. அருமையான தொகுப்பு வட்டார வரலாற்றுக்கு உதவும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...