A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

9 Mar 2013

உபமன்யு சட்டர்ஜியின் English, August

சிறப்பு  பதிவர் - அஜய்

மேற்கில் 'Slacker Novel' என்ற ஒரு ழானர் உண்டு. எந்த வேலையையும் செய்ய விருப்பமில்லாத, வெறுமனே பொழுதைக் கழிக்க விரும்புகிற முக்கிய பாத்திரம் பற்றிய நாவல்கள் இவை. வேலை செய்வது என்பது இவர்களுக்கு வேப்பங்காய் மாதிரி. இத்தகைய தங்கள் இயல்பால் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் இந்த வகை நாவல்களில் இருண்மையான நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கும். Lucky Jim (Kingsley Amis), A Confederacy of Dunces (John Kennedy Toole) போன்ற நாவல்கள் உடனே நினைவுக்கு வருகின்றன. ஒரு விதத்தில் 'Catch-22' நாவலில் நாம் பார்த்த யோசாரியன்கூட ஒரு slackerதான். 

உபமன்யு சட்டர்ஜியின் 'இங்கிலீஷ், ஆகஸ்ட்' நாவலையும் இந்த வகைமையில் நாம் சேர்க்க முடியும்.  ஆனால் அது மட்டுமே இந்த நாவல் இல்லை. தான் இத்தனை நாள் வரை அனுபவித்த சொகுசு வாழ்க்கையைத் தவிர வேறொரு உலகமும் இருப்பதை ஒரு இளைஞன் உணரும் நாவலாகவும் இதை வாசிக்கலாம் (coming of age novel). இந்திய அரசு நிர்வாக அமைப்பைப் பகடி செய்யும் நாவலாகவும் இது விரிகிறது.  இதை எழுதிய உபமன்யுவே இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருப்பது ஒரு சிறப்பம்சம்.

24 வயதான அகஸ்த்யா சென் பற்றிய இந்தக் கதை எண்பதுகளில் நடக்கிறது. சிறுபிள்ளையாக இருக்கும்போதே ஆங்கிலோ இந்தியர்களைப் போல இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் அவனை ஆகஸ்ட் என்று அழைக்கிறார்கள். இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் ஒன்றான மத்னாவில் அவன் கழிக்கும் ஓராண்டை இந்தக் கதை விவரிக்கிறது. ஆகஸ்ட் இந்திய ஆட்சி பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவனுக்கு அதில் ஆர்வமில்லை. தன் வாழ்க்கையில் தான் வேறென்ன செய்வது என்று தெரியாமல் அதில் இணைகிறான். அவன் உயர் நடுத்தர வர்க்கத்தை, ஏன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றுகூடச் சொல்லலாம்.  ஆகஸ்ட்  ஹிங்கிலீஷ் பேசும் தலைமுறையைச் சேர்ந்தவன், சோம்பேறி - ஹிங்கிலீஷ் என்ற பதம் புழக்கத்துக்கு வருமுன்னே உபமன்யு அதைப் பகடி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"Amazing mix, the English we speak. Hazaar fucked. Urdu and American,' Agastya laughed, 'a thousand fucked, really fucked. I'm sure nowhere else could languages be mixed and spoken with such ease.'

அவனது தந்தையுமேகூட சிவில் சர்வீஸில் போற்றுதற்குரிய ஒரு ஆளுமையாக இருந்திருக்கிறார். தலைமை தேர்தல் கமிஷனராக ஓய்வு பெற்ற அவர் இப்போது மேற்கு வங்க ஆளுநரான இருக்கிறார். மத்னா செல்லும் ஆகஸ்ட் அங்குள்ள சூழலைப் பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான், கலாசார அதிர்வு ஏற்படுகிறது. இது அவனுக்குப் பழக்கமில்லாத இடம்.  கனவா நனவா எண்பது போன்ற ஒரு இயல்பற்ற நிலையை உணர்கிறான். கலெக்டர் ஸ்ரீவத்சவ் இவனது உயரதிகாரி. துறை சார்ந்த வெவ்வேறு சந்திப்புகளில் பங்கேற்பது இவனது வேலையாக இருக்கிறது.

ஆனால் அடிப்படையில் ஆகஸ்ட் ஒரு சோம்பேறி. விருந்தினர் மாளிகையில் உள்ள தனது இருட்டு அறையில் பெரும்பாலான பொழுதைக் கழிக்கிறான். மார்கஸ் ஆரிலியஸையும் (Marcus Aurelius) கீதையையும் வாசிப்பது, இசை கேட்டுக் கொண்டிருப்பது, ஆடையில்லாமல் படுத்துக் கொண்டிருப்பது, கஞ்சா அடிப்பது, பகற்கனவுகளின் போதையில் சுய மைதுனத்தில் ஈடுபடுவது என்று இவனது பொழுதுகள் கழிகின்றன. வேலை செய்யாமல் தப்பித்துக்கொள்ள புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டுபிடிக்கிறான். அல்லது, கஞ்சா அடித்துவிட்டு இந்தச் சந்திப்புகளுக்குச் செல்கிறான் - யாரிடமும் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்கிறான். குடும்பத்தோடு இந்த ஊரில் இருப்பவர்கள் வீட்டுக்கு விருந்துண்ணச் செல்கிறான். அவனுக்கு தன் சமையல்காரன் வசந்த் சமையல் குமட்டிக் கொண்டு வருகிறது. தனது மலத்தை அவன் ஆக்கிப் போடுவதாக சந்தேகிக்கிறான் ஆகஸ்ட்.

ஆகஸ்ட் அங்கே சிலரோடு பழக நேர்கிறது. விருந்தினர் மாளிகையில் அவனது பக்கத்து அறையில் இருக்கும் சங்கர் ஒரு பொறியாளன். எப்போதும் சரக்கடித்துக் கொண்டே இருக்கிறான். தும்ரிகள் அவன் நாவிலிருந்து உதிர்கின்றன, ஜெகதாம்பா தன் பணி மாற்றல் விண்ணப்பத்தை ஆவன செய்வாள் என்று நம்புகிறான். ஆட்சியர் ஸ்ரீவத்ஸவ் ஒரு சீரியசான ஆள். தன் பதவி புனிதமானது, தான் புனிதமானவன் என்று நம்புகிறார். ஆகஸ்ட்டைப் பொருத்தவரை அவர் ஒரு குதக்குழி.

உபமன்யு யாருக்கும் பயப்படுவதில்லை. ஏறத்தாழ எல்லாவற்றையும் தன் கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படுத்துகிறார். ஒரு கிறுக்குத்தன, கேனத்தன, காமத்துவ நகைச்சுவை இதில் இருக்கிறது. கட்டுப்பெட்டிகளுக்கு இதுவெல்லாம் ஒரு பெரிய அதிர்ச்சியைத் தரும் நாவலாக இருக்கும்.

இந்தியர்களால் எழுதப்படும் ஆங்கிலப் படைப்புகள் பிரச்சினைகளை பூதாகரமாக்குகின்றன, இந்திய வாசகர்களுக்கு கார்ட்டூன்  மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்தப் படைப்பில் உபமன்வு அதைச் செய்யவில்லை. சில சம்பவங்கள் நமக்கு அதீதமானவையாகத் தோன்றினாலும் சற்றே யோசித்தால் இங்கு இப்படியும் நடக்கும் என்று நமக்கு புரியும். உதாரணத்துக்கு, கதையில் ஒரு இடத்தில் ஆகஸ்ட் ஒரு சிலையைப் பார்க்கிறான். அந்த சிலை கண்ணாடி அணிந்த ஒரு கிழவரின் சிலை. அதன் குதத்தில் ஒரு கம்பி செருகப்பட்டிருக்கிறது. காந்தியை இப்படிச் செய்துவிட்டார்களே என்று ஆகஸ்டுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன ஏதென்று விசாரிக்கும்போதுதான் காந்தி சிலை நேராய் நிற்க இந்தக் கம்பியை முட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. நம் நாட்டில் சிலைகளையும் நினைவகங்களையும் எவ்வளவு அக்கறையாக கவனித்துக் கொள்கிறோம் என்பதைப் பார்க்கும்போது இப்படி எழுதுவதையெல்லாம் பரபரப்புக்கு எழுதப்பட்டது என்றோ டெம்ப்ளேட் எழுத்து என்றோ காந்தியை சிறுமைப்படுத்துவது என்றோ சொல்ல முடியாது. உண்மையிலும்கூட எந்த காந்தி சிலைக்கு எங்கே இந்த கதி நேர்ந்ததோ, யாருக்குத் தெரியும்!

ஆட்சியர்  ஸ்ரீவத்ஸவ் ஒரு விசேடமான நபர். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குறைந்தது அரைமணி நேரமாவது தாமதமாகச் செல்வதுதான் தனது பதவிக்கு மரியாதையாக இருக்கும் என்று நினைக்கிறார். நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் இது பழகிப் போன விஷயமாக இருக்கிறது. அதில் என்ன தவறு என்று கேட்கும் மனநிலையில் இருக்கிறார்கள் அவர்கள்.

அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள்  மேலதிகாரிகளிடம்  கூழைக் கும்பிடு போடுகிறார்கள், அதே நேரம் தனக்குக் கீழே வேலை செய்பவர்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். பொதுவாக அதிகாரம் ஒரு போதையாக இவர்களுக்கு உள்ளது. அதைச் சுவைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அதன் ருசி தெரிந்தவர்களை மரியாதையோடு, ஏன் சற்று பொறாமையோடும் பார்க்கிறார்கள். மேனன் என்ற இன்னொரு அதிகாரி நாவலில் உள்ளான். ஆகஸ்ட் வேலையில் சேர்ந்தவுடன் அவனையும்  மேனனையும் தன் இல்லத்திற்கு இரவுணவிற்கு ஸ்ரீவத்ஸா அழைக்கிறார். மேனன் அப்போது இப்படி நடந்து கொள்கிறான் -

"Menon was of course familiar to the house, but behaved all evening as if the ghost had gone up his arse, jumpy because eager to please, but not knowing how"

ஆகஸ்ட்டின் தந்தை பற்றி மேனன் அறிந்தவுடன் நடந்து கொள்வதை படியுங்கள் -

"Madhusudhan Sen? squeaked Menon. 'You are Madhusudhan Sens's Son?' The ghost had lovingly patted his balls. Surprise and awe had pushed him to the edge of the chair, and widened his mouth and eyes......"

மேனன் இப்படி பேசிக்கொண்டே ஆகஸ்டின் தந்தையின் நிர்வாக வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் மனப்பாடமாக ஒப்பிக்க -

""To whom was he talking?" Agastya wondered. But just the recital of the record of a successful bureaucrat seemed to provide Menon sufficient excitement"

எவரொருவரும் ஆகஸ்ட்டின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கும்போது அவன் தன் பிறப்பு வளர்ப்பு குறித்து சொல்லும் பொய்கள் பிரமாதமானவை. ஒருத்தரிடம் தன் மனைவி இறந்துவிட்டாள் என்று சொல்கிறான். இன்னொருத்தரிடம் தான் ஒரு முஸ்லிம் என்றும் தங்கள் குடும்பங்கள் திருமணத்தை அனுமதிக்கவில்லை என்றும் சொல்கிறான். வேறொருத்தரிடம் மனைவிக்கு  மார்பக புற்றுநோய் இருக்கிறது என்கிறான். அவனுக்கே தான் யாரிடம் எந்தப் பொய்யைச் சொன்னோம் என்பதில் குழப்பம் வந்துவிடுகிறது.

அரசு அதிகாரிகளில் பலர் தங்களை பற்றிய மிதமிஞ்சிய சுய அபிப்பிராயம் கொண்டு தங்கள் அதிகாரம் செல்லாத இடத்திலும் மூக்கை நுழைத்து அசிங்கப்படுவர். தனி மனிதனாக தனக்கு எந்த மரியாதையும் இல்லை, எல்லாம் தான் இருக்கும் பதவிக்கும் அதன் செல்வாக்குக்கு உட்பட்ட இடங்களிலும்தான் தன்னை பிறர் மதிப்பதாக நடிக்கின்றனர் என்பதை உணர மாட்டார்கள். ஒய்வு பெற்ற பின்போ அல்லது பதவி போன பின்பதான் இந்த ஞானோதயம் இவர்களுக்கு வரும்.  இதை  மாவட்ட எஸ்பி குமாரும் பாத்திரம் மூலம் ஒரு சம்பவத்தில் ஆசிரியர் காட்டுகிறார். குமார் பலே உல்லாச பேர்வழி தீவிரமான பிட் பட ரசிகர். இந்திய பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்ற காரணத்தால் இந்திய பிட் படங்கள் தரமானவையாக இல்லை என்ற தனது ஆதங்கத்தை அவர் ஆகஸ்ட்டிடம் பகிர்ந்து கொள்கிறார். இவரும் அதிகார போதையில் தன்னிஷ்டத்திற்கு ஆட்டம் போடுபவர். ஒருமுறை விடுமுறைக்காக ஆகஸ்ட்டுடன் டில்லி செல்கிறார். அங்கு சேர்ந்தவுடன் டாக்ஸி ஏற்பாடு செய்யும் இடத்தில் வழக்கம் போல் கூலி குறித்த பேரம். மட்னவாக இருந்தால் ஓசியிலேயே குமார் சென்றிருப்பார், இங்கு அப்படி முடியாதே. குமார் காட்டு கத்து கத்துகிறார். ஆனால் டாக்ஸி ஓட்டுனர் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை -

"While Kumar tiraded the driver yawned, hawked lit a cigarette and feigned boredom in a few other ways"

குமார் உச்ச கட்ட கோபத்தில் தன் அதிகாரத்தைக் காட்ட  -

"You don't know who we are, I am an SP, an IPS officer, this is an IAS officer ..."

 ஓட்டுனர் செய்வதை படியுங்கள் -

"Upon which very unexpectedly, the taxi driver looking at Kumar with his red hooded eyes, undid his pyjama and drawer strings, fisted his cock and said, 'This is what I think of you Government types'"

நெத்தியடி இல்லையா? தங்கள் பிம்பங்களைப் பற்றி ஊதிப் பெருக்கி வைத்திருக்கும் பலூனை ஓட்டுனர் ஒரு நொடியில் உடைத்து விடுகிறார்.

வார்த்தைக்கு வார்த்தை, பத்திக்கு பத்தி உபமன்யு நம்மை உரக்கவோ உள்ளூரவோ சிரிக்க வைக்கிறார். ஒவ்வொரு பத்தியிலும் ஏதோ ஒரு நகைச்சுவை இருந்தாலும் இதெல்லாம் ஆத்திரத்தின் வெளிப்பாடுகள் என்பதை நாம் உணர்கிறோம். அதற்காக புத்தகம் நெடுக பச்சை பச்சையாக ஜோக்குகள் இருக்கின்றன என்று சொல்ல முடியாது. குழப்பத்தில் உள்ள ஒரு மனதைக் குறித்த புரிதலைக் கொடுக்கும் கட்டங்களும் இந்தப் புத்தகத்தில் உண்டு.

"Eventually, he knew, he would marry, perhaps not out of passion, but out of convention, which was probably a safer thing. And then, in either case, in a few months or years they would tire of disagreeing with each other, or what was more or less the same thing, would be inured to each other's odd and perhaps disgusting ways, the way she squeezed the tube of toothpaste and the way he drank from a glass and didn't rinse it, and they would slide into a placid and comfortable unhappiness, and maybe unseeingly watch TV every day, each still a cocoon."


கஸ்ட்டை நாம் ஏன் விரும்ப வேண்டும்? அவனது உணர்வுகளை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? அவனுக்கு பணப் பிரச்சினைகள் கிடையாது. நன்றாகப் படித்தவன். இந்திய பணிகளில் உயர்ந்ததை அடைந்தவன் - கணினிகள் வருவதற்கு முன்பான எண்பதுகளில் எழுதப்பட்ட கதை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவனைவிட கடுமையான பிரச்சினைகள் உள்ள ஏராளமானவர்கள் நம் புரிதலைக் கோரி நிற்கிறார்கள். 

ஆனால் இதைப் பாருங்கள். ஆகஸ்ட் உடம்பு சரியில்லாமல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு தனது அறையில் படுத்துக் கிடக்கிறான். திடீரென்று காரணமில்லாமல், கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கிறான். அவன் தனது நிலையை நினைத்து சிரிக்கிறான், ஏன் சிரிப்பு வருகிறது என்று தெரியாமல் சிரிக்கிறான். பணக்காரனோ ஏழையோ உயர் தாழ் மத்திய வர்க்கமோ, நம்மில் எத்தனை பேர் நம் வாழ்வில் இந்த மாதிரியான ஒரு இடத்தில் இருந்திருக்கிறோம்? அன்றாட வாழ்வைவிட்டு வேறு தளத்துக்குப் போய்விட்ட உணர்வு, ஒரு புகைமூட்டத்தில் நடமாடுகிற உணர்வு, நாமறிந்த ஒன்றுதான்.

இவன் தான் கனவு கண்டு கொண்டிருந்த வேலையை விட்டு வலுக்கட்டாயமாக தனக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டவன் அல்ல. வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும் என்று எதுவும் தெரியாதவன். ஆனால் பிழைப்புக்காக எதையோ செய்தாக வேண்டிய நிலைமையில் இருப்பவர்களுக்கே உரிய குழப்பமும் அர்த்தமில்லாத்தனமும் இவனுக்கு உண்டு. ஆக்ஸ்ட்டின் விஷயத்தில், அவன் தன் அப்பாவுக்கு ஏமாற்றம் தரக்கூடாது என்று இந்த வேலையில் சேர்கிறான் என்பதும் உண்மை. பணம் இருக்கிறதோ இல்லையோ, இது போன்ற ஒரு அசாதாரணமான உணர்வு நம் எல்லாருக்கும் பொதுவான ஒன்றுதான் என்று நான் நினைக்கிறேன்.

ஏதோ ஒரு இடத்தில் இந்த உணர்வுகளைப் புதைத்து வைத்துவிட்டு நாம் நாம் வாழ்க்கையை நடத்துகிறோம். ஆனால் பலருக்கு இது சாத்தியமில்லை என்பதுதான் பிரச்சினை. என்னால் ஆகஸ்டின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது - குறிப்பாக, அலுப்பூட்டும் வேலை, ஏதோ ஒன்றை வாசித்துக் கொண்டு பொழுதைப் போக்கும் கனவுகளை யதார்த்தம் கலைத்துப் போட்டு நம் கவனத்தைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் கட்டங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நாவலில் ஆகஸ்ட் என்றில்லை, பலருக்கும் இந்த துண்டிக்கப்பட்ட, தனிமை உணர்வு உண்டு. எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கும் ஷங்கர் ஒருவன். தன்னுடைய மனநிலையும் ஆகஸ்ட்டின் மனநிலையும் ஒன்றுதான் என்று அவன் சொல்வதைப் படிக்கும்போது நம்மில் பலருக்கும் இந்த எண்ணம் இருப்பதை உணர முடியும்.

"We are men without ambition, and all we want is to be left alone, in peace so that we can try and be happy. So few people will understand this simplicity.”

ஷங்கரும் ஆகஸ்ட்டும் இப்படி குடி, கஞ்சா என தங்கள் மனதின் வெறுமையைப் போக்க முயல, இதற்கு மாறாக உள்ளது தம்சே என்ற பாத்திரம். ஷங்கர் இருக்கும் பதவியில் முன்னர் இருந்த தம்சே கோவாவை சேர்ந்தவன்.  கோவாவின் விசித்திர ஓவியங்களிலும் நளினமற்ற கவிதைகளிலும் தன் தனிமையையும் மனநிலையையும் வெளிப்படுத்தியிருக்கிறான், அதை கடக்கவும் முயன்றிருக்கிறான். இவன் வரைந்த ஓவியங்கள் மற்றும் கட்டிட வரைபடங்கள் தவிர வேறெதுவும் இந்தக் கதையில் இல்லாவிட்டாலும் தம்சேயும் நம்மவனே என்று நாம் உணர்கிறோம்.

இந்த இரண்டிற்கும் மாறாக இருப்பவர்கள் ஸ்ரீவத்ஸா போன்றவர்கள் - இவர்களுக்கு தங்களை பற்றி எந்த சந்தேகமும் இல்லை. உலகில், வாழ்க்கையில் தங்கள் இடம் எது, இப்போது எங்கிருக்கிறோம், இலக்கை எப்படி அடைய வேண்டும் என்பதெல்லாம் இவர்களுக்கு அத்துப்படி. இதில் எந்த குழப்பமும் இல்லை. இவர்களை நம்மவர்களாக உணர முடியாவிட்டாலும், இவர்களின் எதையும் கேள்வி கேட்காத, அப்படியே ஏற்றுக்கொள்கிற தன்மை சில நேரம் நம்மைப் பொறமைப்பட வைக்கும் -அப்படி நாமும் இருந்தால் எளிதில் உலகுடன் ஒத்து வாழலாமே என.

நாவலின் சிறந்த விஷயம், எந்த இடத்திலும் இது போதனையாக இருப்பதில்லை என்பதும் ஆகஸ்ட் ஞானம் பெற்று கிராம மேம்பாட்டு சேவை செய்யப் போவதில்லை என்பதும்தான். தன் வாழ்வின் பொருள் இதுதான் என்பதை அவனுக்கு உணர்த்தும் தரிசனம் எதுவும் அவனுக்குக் கிட்டுவதே இல்லை. கோட்ட வளர்ச்சி அதிகாரியாக ஆகஸ்ட் நியமிக்கப்படுகிறான். கிராமங்களின் பிரச்சினைகளை நேரடியாகக் காணச் செல்கிறான். சிலவற்றுக்குத் தீர்வு காணவும் முயற்சிக்கிறான், ஆனால் அவன் கதையின் துவக்கத்தில் எப்படி இருக்கிறானோ அப்படிதான் கடைசிவரை இருக்கிறான். எப்போதும் திசையற்ற ஒரு சோம்பேறியாக இருப்பதுதான் அவனது இயல்பு.

இது ஒரு வக்கிரமான நகைச்சுவையாகக்கூட புரிந்து கொள்ளப்படலாம். கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி அவனிடம் தன் பிரச்சினைகள் குறித்த விண்ணப்பத்தைக் கொடுக்க வரும்போது அவனுக்கு புடைப்பும் நேர்கிறது. அவன் அவளுக்கு உதவி செய்கிறான். ஆனால் நேர்மையாக, தன் தினப்படி வழக்கத்துக்கு மாறாக எதையாவது செய்ய வேண்டும் என்ற விருப்பமும் அந்தப் பெண்ணும்தான் அதைச் செய்யக் காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறான். தன் மனநிலை அப்படி ஒன்று வித்தியாசமானதில்லை, தன்னைப் போல பலரும் உண்டு என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். ஆனால் இறுதி வரை அதை ஏற்றுக் கொண்டு பணியில் ஒன்ற முடியவில்லை. பயிற்சி காலத்தின் இறுதியில் அவன் துணை ஆட்சியராக பணி நியமனம் பெறுகிறான். ஆனால் அவன் கல்கத்தாவுக்குக் கிளம்புகிறான், சிவில் சர்விஸிலிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்துவிட்டதான ஒரு உணர்த்துதலுடன் நாவல் முடிவுக்கு வருகிறது. துவக்கத்தில் இருந்தது போலவே முடிவிலும் ஆகஸ்ட் இருப்பு கொள்ளாமல் தவிக்கிறான்.

 பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு இந்த நாவல் எழுதப்பட்டிருந்தால் இன்னமும் நாம் இதைப் பேசிக் கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன். இதற்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கும். ஆகஸ்ட்டின் நண்பன் துர்போ ரித்விக் கடக் பற்றி நாவலில் சொல்வது இங்கு பொருத்தமாக இருக்கும் - "He was awful at first, then the French praised him and he became a master".

 பிகு : ஆகஸ்ட் தன் பயிற்சியை தொடர்ந்திருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியைப் போன்ற, 'The Mammaries Of the Welfare State' என்ற நாவலில் அவன் அரசு நிர்வாகத்தில் இருக்கிறான். இப்போதும் அவன் தன் பணியில் சுகமாகப் பொருந்தவில்லை, வழக்கம் போலவே தன் வழியில் தனியாகப் போய்க் கொண்டிருக்கிறான், வேலை செய்வதிலிருந்து தப்பிக்க முயல்கிறான்.  அது வேறு கதை.

English, August
Upamanyu Chatterjee
Faber And Faber (penguin India) (2011)  
Rs. 248

Image Credit : Amazon, IFFR

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...