A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

18 Apr 2013

PHYSICAL DIAGNOSIS - RUSTOM JAL VAKIL & ASPI F. GOLWALLA


கோனார் நோட்ஸ், டைகர் மேக்ஸ் கைடு என பாட நூல்களுக்கும் துணை நூல்களுக்கும் அறிமுகமும் விமர்சனமும் எழுத தொடங்கினால் தமிழகத்தில் ஆளாளுக்கு விமர்சகர் ஆகி விடலாம்தான். நேரமின்மையோ வாராவாரம் தொடர்ந்து எழுதியாக வேண்டிய கடமையுணர்வோ மட்டும் அல்ல, இப்புத்தகத்தை பற்றி எழுத வேறு சில காரணங்களும் எனக்குண்டு. 


அறிவியல் பாட நூல்கள் இருவகை - கறாரான அறிவியல் நடையில் கடினமான மொழியில் அதிக அளவில் எழுதப்படும் நூல்கள் முதல் வகை. இந்தியாவைப் பொருத்தவரை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதும் நான்கைந்து அசலான துறை நூல்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்திகளை பிய்த்துப் போட்டு நம்மூர் அறிஞர்கள் தேர்வில் தேர்ச்சி எனும் நோக்கத்திற்காக மட்டும் உருவாக்கும் கலவைகளே இவ்வகை நூல்களில் பெரும்பாலானவை. மருத்துவத்திலும் பொறியியலிலும் மலிந்திருக்கும் மூன்றாம்தர நூல்கள் பெரும்பாலும் இப்படி உருவானவையே. எழுத்து நடையில் உள்ள வேற்றுமைகள் நமக்குத் தெளிவாகவே இவையெல்லாம் பத்து நூல்களின் கொத்து பரோட்டா என்பதைக் காட்டிவிடும். 


மற்றொரு வகையுண்டு. அறிவியலை வாழ்வில் பொருத்திப் பார்க்கும் நோக்கம் கொண்ட, அனுபவ அறிவு மிளிரும், எளிமையான நடையில் தெளிவாக எழுதப்படும் நூல்கள். துறை சார் மேதமைக்கு மட்டும் என்றில்லை, ஆர்வமிருக்கும் சாமானியரும் இவற்றை வாசிக்க முடியும்.  துறை சார் அறிவுடையவர்களும் அறியாத ஏதோ ஒரு நுட்பத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் அதே வேளையில், அத்துறைக்கு முற்றிலும் அன்னியராய்  இருக்கும் சாமானியரும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் இருக்கும் நூலையே ஒரு நல்ல அறிவியல் நூல் என்பேன். (உதாரணம் – phantoms in the brain, திரி தோஷ மெய்ஞான விளக்கம்)



கோல்வாலா, வக்கில் எழுதி பல பதிப்புகள் கண்ட இந்த நூலில் துறை சொற்கள் சாமானிய வாசகரை கொஞ்சம் விலக்கி வைக்கக்கூடும். இது ஒன்றைத் தவிர, இரண்டாம் வகைமைக்குள்தான் இந்த நூல் தன்னை அதிகம் பொருத்திக் கொள்ளும் என்று தோன்றுகிறது. ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்த காலகட்டத்தில் வாங்கிய புத்தகம். இன்றுவரை அதிக முறை நான் புரட்டிய நவீன மருத்துவ நூல் என்றால் அது இந்நூலாகத்தான் இருக்கும். எனக்கு மிகவும் நெருக்கமான நூல். தொடர்ந்து வாசித்ததன் வழியாகவே நோயாளிகளை எதிர்கொள்ளும் நம்பிக்கை ஓரளவிற்கு நிலைத்தது என சொல்வேன்.

நோயாளிகள் சொல்லும் பொதுவான அறிகுறிகளைப் பட்டியலிட்டு, அவை எந்தெந்த நோய்களுடன் தொடர்புடையவை என்பதை முதல் பகுதி விவரிக்கிறது. அதன் பின்னர் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பகுதிவாரியாய் கவனிக்கப்பட வேண்டிய நோய்க்குறிகளை விவரிக்கிறது அடுத்த பகுதி. பனிரெண்டாம் பதிப்பிற்கான முன்னுரையில் “ பரிசோதனை கூடங்களும், நவீன கருவிகளும் எவ்வகையிலும் கண், செவி, விரல் நுனி ஸ்பரிசம் மூலம் செயலாற்றும் நோயறியும் முறைகளுக்கு மாற்றாகாது என்பதை இந்நூல் மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது” என்று எழுதுகிறார் கோல்வாலா. இதுவே இந்நூலின் சாராம்சம் எனக் கூறலாம். ஒன்று மனிதனுக்குள் குழாய் செல்ல வேண்டும் அல்லது குழாய்களுக்குள் அவன் செல்ல வேண்டும்- இதுவே இன்றைய நவீன மருத்துவத்தின் வழிமுறையாக இருக்கிறது.


அறிவியலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் விதமாக நேர் விவாதத்தின்போது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஒரு முறை சொன்னார் “பல்லு தேச்சா நல்லது இது அறிவியல், அத ஆலம் குச்சியிலையும் விளக்கலாம், நூறு ரூபா ப்ரஷ்லயும் விளக்கலாம். தனக்கு லாபம் தர்ற தொழில்நுட்ப்பத்தைத்தான் ஒவ்வொருத்தனும் உருவாக்குவான்”. அறிவியல் ஒருவகையான ஆன்ம தேடல். தொழில்நுட்பம் அப்படியிருக்க வேண்டியதில்லை. லாப வெறியும் சுயநலமும் ராட்சசத்தனமான தொழில்நுட்பங்களை உருவாக்கி பெருந்திரள் மக்களை அடிமையாக்கி வைத்திருக்கிறது. காந்தி அஞ்சியது இதைதான் - அறிவியலை அல்ல, அறிவியலின் பெயரால் நிகழ்த்தப்படும் சுரண்ட;லை.

இன்று நவீன மருத்துவம் இப்படி லாபம் தரும் தொழில்நுட்ப மாஃபியாக்களின் பிடியில் சிக்கியிருக்கிறதோ எனும் சந்தேகம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. பலவகையிலும் மருத்துவமே அறிவியலைக் காட்டிலும் கலை எனும் வகைப்பாட்டிற்குள் அடங்குவதாகவே எனக்கும் தோன்றுகிறது. அதுவும் புலன் சார் நேரடி நோயறியும் முறை (clinical diagnosis -medicine) உண்மையில் ஒரு கலை என்றே சொல்ல வேண்டும். பொறுமையாக நோயாளி சொல்வதை செவிமடுத்துக் கேட்டு, சில அடிப்படை சோதனைகளை செய்வதன் மூலமே தொண்ணூறு சதவிகித நோய்களைக் கண்டறிய முடியும். அகவயமாக நோயாளி என்ன உணர்கிறான் (symptoms) ? புலனுறுப்புகளைக் கொண்டு மருத்துவர் புறவயமாக எவைகளை கவனிக்கிறார் (signs) ? அசைவுகள் மூலம் உணரப்படும் புறவயமான நோய் குறிகள் எவை (tests)?   இவை மூன்றையும் சரியாக உள்வாங்குவது நோயறிதலின் முக்கியமான அடிப்படைகள்.

நூலின் உள்ளடக்கம் சார்ந்து, பயனுள்ள ஒரு சிறு பகுதியின் மொழியாக்கத்தைச் சுருக்கி தருகிறேன். நாம் அனைவரும் அறிந்த, உணர்ந்த தலைவலிதான் பேசுபொருள்.

தலை வலி என்னென்ன காரணங்களால் வரக்கூடும்?

மன அழுத்தம், மன நிலை காரணமாக, தசை நார்கள் சுருங்கி ஏற்படும் அழுத்தம் காரணமாக, மைக்ரேன், க்ளுகோமா போன்ற கண் நோய்கள், பற்களின் வேர்களில் ஏற்படும் கட்டிகள், சைனசில் கிருமி தொற்று, கழுத்து எலும்பு தேய்மானம், ரத்தநாளங்களில் நோய் தொற்று, கான்சர் கட்டிகள், மூளை கட்டிகள், மூளையில் ரத்த கட்டு, மூளைக்குள் அழுத்தம் அதிகரித்தல் ( intra cranial pressure elevated) போன்றவைகளில் எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.

தலைவலியின் வரலாற்றைக் கேட்டறிவதன் மூலமும், அதன் தன்மையை புரிந்துகொள்வது மூலமும் மேலும் நோயை நெருங்க முடியும். சிறு வயதிலிருந்தே அடிக்கடி தலைவலி வருவதும் போவதுமாக இருந்தால் அது மைக்ரேனாக இருக்கக்கூடும். திடீரென்று தோன்றும் தீவிரமான தலைவலிக்கு மூளைக்குள் புதிதாக முளைக்கும் கட்டி அல்லது மெனிஞ்சிடிஸ் காரணமாக இருக்கலாம். தீவிரமான துல்லிய வலி – சைனசைடிஸ், ரத்த கசிவு, தலையில் அடி ஆகியவைகள் காரணமாக ஏற்படலாம். அதுவே பரவலான மந்தமான வலியாக இருந்தால், கோடின், கர்பத்தடை மாத்திரைகள் ஆகியவைகளை உட்கொள்வது ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாக ஒற்றை தலைவலி மைக்ரேனுடன் தொடர்புடையது. அதுவே முன்தலை வலியாக இருந்தால் ரத்தத்தில் யூரியா அளவு கூடுவது காரணமாக இருக்கலாம். பின் மண்டையில் இருந்து முன் தலையை நோக்கி பரவும் வலி பொதுவாக கழுத்து எலும்பு தேய்மானத்துடன் தொடர்புடையது. அதுவும் இவ்வகை வலி காலை வேளைகளில் அதிகரிப்பதை கவனிக்க முடியும். தலையை இறுகக் கட்டுவதால் வலி குறைகிறது என்றால் ரத்தநாளம் தொடர்புடைய தலைவலியாக இருக்ககூடும்.

இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. சரியான உரையாடல் வழியாகவே எளிதாக நோயறிய நம்மால் இயலும் என்பதைச் சுட்டவே இந்தப் பத்தி. ஒருவகையில் மருத்துவன் தன்முன் இயற்கையால் வைக்கப்படும் சுவாரசியமான புதிரை விடுவிக்க தர்க்கத்தையும் உள்ளுணர்வையும் கையாள்கிறான். வி.எஸ். ராமச்சந்திரன் இப்படி நோயறியும் முறையை ஷெர்லாக் ஹோம்சின் துப்பறியும் திறனுடன் ஒப்பிட்டு எழுதுகிறார். வெகு அரிதாகவே இன்று நாம் இத்தகைய திறன் கொண்ட மருத்துவர்களைக் காண்கிறோம். ஆயுர்வேத மருத்துவர் தேரிசனம்கோப்பு மகாதேவன் மூளையின் எப்பகுதியில் ரத்த அடைப்பு ஏற்பட்டு பக்க வாதம் வந்திருக்கிறது என்பதை புற நோயாளி பிரிவில் எவ்வித ஸ்கான் துணையும் இன்றி, தொடர் கேள்விகள் மற்றும் எளிய மேஜை சோதனைகள் மூலம் கண்டறிந்ததை கவனித்திருக்கிறேன், மிகச் சரியாக, எந்தெந்த கழுத்து எலும்புகளுக்கிடையில் வட்டிடை ஜவ்வு உலர்ந்திருக்கிறது என்பதையும் அவர் புற சோதனைகள் மூலமே கண்டறிந்ததையும் நான் கண்டிருக்கிறேன்.

நூலில் நரம்பு மண்டல பரிசோதனை பற்றிய பகுதி மிக சுவாரசியமானது. வலது பக்கம் பாதித்த பக்க வாத நோய்க்காரர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், தெளிவாக அவருடைய இடது மூளை பாதித்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அவரால் சரியாக பேச முடியவில்லை. எனில், அடுத்த கேள்வி  - நாம் சொல்வதை சரியாக உள்வாங்கிக்கொண்டு பதிலளிக்க முடியவில்லையா? புரிகிறது, ஆனால் பதில் சொல்ல முடியவில்லையா? பதில் சொல்கிறார், ஆனால் அது தெளிவாக புரியவில்லையா? நாம் சொல்வது புரிகிறது, ஆனால் அவரால் ஒலியெழுப்ப முடியவில்லையா? ஒலியெழுப்ப முடிகிறது, ஆனால் கோர்வையாகப் பேச முடியவில்லையா? இவைகளுக்கான விடைகளை நாம் எளிதாக சில கேள்விகள் மற்றும் சோதனைகள் மூலம் கண்டடைய முடியும். ஒவ்வொன்றும் மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் தனி செயல்பாடு. துல்லியமாக மூளையின் எந்தப் பகுதி பாதித்துள்ளது என்பதைக் கண்டறிய இயலும்.

உள்ஊடுருவல் அல்லாத (non invasive) எளிய நுட்பங்கள் வழியாகவே பெரும்பாலான நோய்களைத் துல்லியமாக அறிய முடியும். மருத்துவம் ஒரு வகையில் கணிதத்திற்கு மிக நெருக்கம், அதே சமயம் அது ஒரு கலையும்கூட. உள்ளுணர்வும் தர்க்கமும் சந்திக்கும் புள்ளியில் மிக சிறந்த மருத்துவன் உருவாகிறான் என்று கூட தோன்றுகிறது. ஏறத்தாழ தேர்ந்த புனைவாசிரியன் போல.

இந்நூல் அனைவருக்குமான நூலா என்றால் இல்லையென்றே சொல்வேன். இது மேயோஸ் கிளினிக் போலோ, டாக்டர் இல்லாத இடத்தில் பயன்படுத்தக்கூடியது போலோ, எளிமையான நூலில்லை நிச்சயமாக. ஆனால் ரெஃபிரன்ஸ் நூலாக ஒரே மூச்சில் வாசிக்கும் வகையில் இந்நூல் அமைந்திருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. 

இதே வகைப்பாட்டைச் சேர்ந்த முக்கியமான மேலை நூல்களான மெர்க்ஸ் மானுவல், ஹச்சிசன் நூலில் உள்ளது போன்ற பன்நிற படங்கள் இல்லை என்பதை வேண்டுமானால் ஒரு குறையாக சொல்லலாம். இந்நூலும் இது சுட்டும் மருத்துவமும் இன்று அருகி வரும் கலை. இந்த வகை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவுறுத்தும் நோக்கிலேயே இந்நூலைப் பற்றிய அறிமுகத்தை எழுதுகிறேன். 

ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகள் மட்டுமே நோய்/ நோயாளி வரலாற்றை அறிய முக்கியத்துவம் அளிக்கின்றன எனும் கூற்று உண்மையல்ல.  புற நோய்க்குறிகளுக்கு அளிக்கும் அதேயளவு முக்கியத்துவம் நோயின் அக உணர்வுக் கூறுகளுக்கு நவீன மருத்துவம் அளிப்பதில்லை எனும் கூற்றிலும் முழு உண்மையில்லை என்பதையே இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. நடைமுறை அனுபவங்கள் நமக்கு வேறு உலகை காட்டுவதாக இருக்கிறது என்று குறை கூறலாம். எனினும் அது நடைமுறை குளறுபடியே தவிர மெய்யியல் தளத்தினுடையது அல்ல. ஆகவே களைந்து முன் நகர இயலும். 

நோயறிதல் தளத்தில் அதீத தொழில் நுட்ப சார்பில்லாத நவீன மருத்துவமும் மாற்று மருத்துவ முறைகளும் இணக்கமாக இருப்பதை உணர முடிகிறது. இன்றைய தேதியில் நான் எனது வரையறைப்படியும்கூட தேர்ந்த மருத்துவன் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆனால் அதை நோக்கிய முயற்சியை நான் ஒரு நாளும் கைவிட மாட்டேன் என்பதை உறுதியாக சொல்வேன். அப்பயணத்தில் இவ்வகையிலான நூல்கள் எனக்கு உறுதுணையாக இருக்கின்றன. மருத்துவத்தை கலையாக அணுகும் ஒவ்வொரு மருத்துவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய / வைத்திருக்க வேண்டிய நூல் இது.


-physical diagnosis

rustom jal vakil and aspi  f golwalla

media promoters and publishers pvt ltd, mumbai

clinical medicine, english

rs.450/-
-    சுகி

5 comments:

  1. ஒரு வித்தியாசமான கட்டுரையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
    //மருத்துவத்தை கலையாக அணுகும் ஒவ்வொரு மருத்துவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய / வைத்திருக்க வேண்டிய நூல் இது.//

    ஆனால் மருத்துவத்தை கலையாக அணுகுதல்? மருத்துவத்தை ஒரு கலையாகவா அணுகவேண்டும்? புரியவில்லை....

    சிவா கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  2. சிவா, மருத்துவத்தை கலை என்று சொல்வது, அதன் கிளிணிகள் லெவலில், இது எப்போதும் சொல்லப்படும் ஒரு தரப்பு தான். art of attending patients. அதைத்தான் சூட்ட முயல்கிறேன். மக்களுக்கு இன்பம் அளிப்பதை, சுகம் அளிப்பதை தான் கலை என்று சொல்கிறார் தோரோ, அப்படியென்றால் clinical medicine ஒருவகையான கலை.

    ReplyDelete
    Replies
    1. புரிந்தது சுனில். விளக்கத்திற்கு நன்றி.
      (நோயாளிகளை குணப்படுத்துவதற்காக மருத்துவத்தை மருத்துவமாகவே மட்டும் பாருங்க அப்பு, கலை, இலக்கியமாவெல்லாம் பார்க்கிறேன்னு ஆளை அம்போவாக்கிறாதிங்கப்பு!:)

      சிவா கிருஷ்ணமூர்த்தி

      Delete
    2. ஒரு வார்த்தை - தமிழில்தான் கலை என்பதைக் கற்பனை என்று புரிந்து கொள்கிறோம்.

      ஆங்கிலத்தில் art என்று சொல்லும்போது பொருள் வேறு - early 13c., "skill as a result of learning or practice," from Old French art (10c.), from Latin artem (nominative ars) "work of art; practical skill; a business, craft," from PIE *ar-ti- (cf. Sanskrit rtih "manner, mode;" Greek arti "just," artios "complete, suitable," artizein "to prepare;" Latin artus "joint;" Armenian arnam "make;" German art "manner, mode"), from root *ar- "fit together, join" (see arm (n.1)).
      http://www.etymonline.com/index.php?term=art

      ஆங்கிலத்தில்கூட பாருங்க, வேர்ச்சொல் Sanskrit rtih "manner, mode;" என்று வருகிறது : அந்த அளவுக்கு பயிற்சி தேர்ச்சியாகி விடுகிறது.

      கலை என்ற சொல்லுக்கேகூட காஷ்மீர் சைவத்தில் ஆழமான பொருள் உண்டு ; 36 தத்துவங்களில் ஒன்றான கலா தத்துவம் பற்றி ஜி.டி. தேஷ்பாண்டே எழுதுகிறார், "மனித வாழ்வில் ஊடாடி இயங்கும் பரம்பொருள் பேராற்றலின் ஒரு பங்கினை கலை என்னும் சொல் சுட்டுகிறது. வரையறுத்த ஆன்மாவுக்கு வரையறுத்த செயல்திறனை செயல்திறனை ஊட்டும் தனித் திறமை பெற்றிருப்பதால் கலை தத்துவத்தை தனித்த ஒரு தத்துவமாகக் கருதுகின்றனர்..." (மொழிபெயர்ப்பு இரா. மதிவாணன், சாகித்திய அகாதமி பதிப்பு).

      கலை என்பது கற்பனை அல்ல - அறியாமையிலிருந்து உண்மையை நோக்கிச் செல்லும் ஆற்றலை அளிக்கும் உந்து விசை :)

      Delete
    3. புரிந்தது நட்பாஸ் ஸார். நன்றி

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...