A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

6 Jun 2013

தலைமுறைகளை இணைக்கும் குழந்தைக் கதைகள் - ஸ்ரீதர் நாராயணன்





நான் சிறுவனாக இருக்கும்போது வாசித்த புத்தகங்களில் இப்போதும் அகலாமல் மனதில் நிற்கும் புத்தகம் எது எனக் கேட்டால் 'தாத்தா' என்பேன்.

தாத்தா மட்டுமல்ல. பாட்டிகள், கொள்ளுப்பாட்டிகள், அத்தைகள், மாமாக்கள் என்று பெரிய பட்டாளமே கதை சொல்வதன் மூலமாக குழந்தைகளை கட்டிப் போட்டு வைக்கும் வித்தையில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். நீதிக்கதைகள் ஸ்டாக் தீர்ந்து போகும்போது 'கல்யாணம் பாட்டு பாடிகிட்டே போறானா... பின்னாடியே அந்த சின்னப் பயலும் டயர் விட்டுக்கிட்டே போறான்' என்று சினிமா கதைகளை எல்லாம் சேர்த்து கதை விடுவார் பெரிய பாட்டி. விளக்கொளி இல்லாத பல வெக்கை மாலைப் பொழுதுகளை அவர்கள் தங்கள் குரல்களால் நிறைத்திருந்தார்கள்.

தாத்தாவிடம் கதை கேட்பதற்கு அதிக பிரயாசைப்பட வேண்டும். எல்லா வேலைகளுக்கும் கால அட்டவணை போட்டு (ஒம்பதே முக்கால் ஆச்சா? சாப்பிட தட்டு வைக்க சொல்லு அம்மாவை) செயல்படும் அவருக்கு, மாலை ஆனவுடன் வாசலில் அழிக்கம்பி போட்ட பெரிய திண்ணையில் ஈஸிசேருடன் செட்டில் ஆகிவிடவேண்டும். வாசலோடு போவோர், வருவோர் பற்றிய பேச்சில் தொடங்கி, அப்படியே தன்னுடைய பணிக்காலம், (52ல தென்காசி போஸ்டிங். அப்ப உங்க சித்தி இவ வயித்துல அஞ்சுமாசம்....), அரசியல் நிலவரம், தாயாதிகள் தகராறு என்று ஒரு சுற்றுச் சுற்றி 'இதத்தான் சொல்லி வச்சான்' என்று ஆரம்பித்தால் ஏதாவது கதை சொல்லப் போகிறார் என்று பொருள்.

'அதான் கடவுள், கத்திரிக்காய்க்கு மகுடம் சூட்டி அழகு பண்ணியிருக்கார்' என்றும் 'பாருங்களேன், அதும் மண்டைல ஆணி அடிச்சு தண்டனை கொடுத்திருக்கார் கடவுள்' என்றும் தெனாலிராமன் டகால்ட்டி அடிக்கும் கதையை பலமுறை அவர் குரலில் கேட்டிருக்கிறேன். சில சமயம் அவருக்கு முன்னர் நாங்களே வேகவேகமாக கதையைச் சொல்லி முடித்துவிடுவோம். லேசாக சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, அவரும் ஒருமுறை சொல்லிப் பார்த்து குழந்தை போல் சிரித்துக் கொள்வார்.

தெனாலிராமன், ஈசாப் கதைகள், அரேபிய இரவுகள், பஞ்சந்தந்திர கதைகள், பட்டி விக்கிரமாதித்தன் கதைகள் என்று பெரிய களஞ்சியமே சேர்த்து வைத்திருந்தார். ஆனால் அவை பெருமளவும் குழந்தைகளுக்கான கதைகளே கிடையாது. பெரியவர்களுக்கான கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லி வைத்தார்கள் என்பதுதான் உண்மை. சிறுவர்களாக இருக்கும்போது சிரிக்க வைக்கும் கதைகள், கொஞ்சம் விவரம் தெரிந்ததும் வேறொரு 'மறைபொருளை' விளக்குகிறது.

தாத்தா சொல்லும் பல கதைகள் அச்சில் அதிகம் பார்த்திராத 'கர்ண பரம்பரை' கதைகள். அந்தக் கதைகளை இப்போது குழந்தைகளுக்குச் சொல்லும்போது பிற்சேர்க்கையாக நிறைய சொல்லத் தோன்றுகிறது. யோசித்துப் பார்த்தால் குழந்தைகளிடம் கதை சொல்வதற்கும் ஒரு குழந்தை மனம் தேவையாக இருக்கிறது.

OoO

சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்களும் தங்களை 'மீள் உருவாக்கிக்' கொள்ள அருமையான வாசல். இப்போது நினைத்துப் பார்க்கும்போதும் சின்ன வயதில் படித்த ஒரு கதை என் மனதில் பசுமையாக நினைவிருக்கிறது - ஏழு நிற இதழ்கள் கொண்ட பூவை வரமாக பெற்றுக் கொண்ட ஷேன்யா எனும் சிறுமி, ஒவ்வொரு இதழாகக் கிள்ளிப் போட்டு 'பறப்பாய் பறப்பாய் பூவிதழே, பறப்பாய் தெற்கிருந்து வடக்கே' என்று பாட்டு பாடி வடதுருவத்திற்கு எல்லாம் போய் நிஜப் பனிக்கரடிகளை பார்த்துவிட்டு வருவாள். அப்புறம் பாபா திரைப்படம் பார்க்கும்போது அந்தக் கதையின் உணர்வுகள் என் மனதில் மீண்டும் கிளர்ந்தெழுந்தன.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்களில் இயற்பியல் பாடங்கள் எளிய முறையில் கதைகள் போல சொல்லப்பட்டிருந்தது நினைவிருக்கிறது. Dynamic equilibrium, escape velocity போன்ற சில சிக்கலான விஷயங்கள் எளிதாக புரிந்தன.

வாண்டு மாமாவின் சில காமிக் ஸ்ட்ரிப்கள் வழியாக செம சுவாரசியமான சிறுவர் கதைகள் படித்திருக்கிறேன். இன்றைய டிஸ்னி / பிக்ஸர் காலத்தில் அத்தனை கதைகளும் பிரமாதமாக திரைப்படங்கள் / தொடர்களாக வருகிறது. சுட்டிக் குரங்கு ஜார்ஜ், சிறுவன் காயூ (Caillou)-வின் அனுபவங்கள், டோராவின் தேடுதல்கள், கௌபாய் பொம்மை வுடி, துப்பறியும் பத்திரிகையாளன் டின்டின் என்று பலரும் திரையில் வந்துவிட்டார்கள்.

இதெல்லாம் இல்லாத காலத்தில் நான் முதன்முறையாக பள்ளியில் பரிசாக வாங்கியது படப்புத்தகங்கள்தான். இரண்டு சிறுவர்கள் சீஸா ஆடுவது போலிருக்கும் படங்களை அடுத்தடுத்த பக்கங்களில் வெளியிட்டிருப்பார்கள். அந்த ஸ்ட்ரிப்பை மட்டும் வெட்டி வேகமாகப் புரட்டினால் இரு சிறுவர்களும் மாறி மாறி சீஸா ஆடும் காட்சி அசைபடமாகத் தெரியும்.

ஐந்தாவது வகுப்புவரை நான் படித்தது ஒரு கான்வென்ட் பள்ளி. பல்வேறு போட்டிகள் வைத்து பல புதிய புத்தகங்களை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தினார்கள். என்னை விட என் அம்மாவிற்கு அந்தப் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். அவருடன் உட்கார்ந்து அந்தப் புத்தகங்களை வாசிப்பதை பெரிதும் விரும்பியிருந்தேன். ஐந்தாவது வகுப்பிற்கு பிறகு வேறு பள்ளி. வேறு பாடங்கள். வேறு சூழல். போட்டிகள், பரிசுப் புத்தகங்கள் எல்லாம் வெகுவாக குறைந்து போய், வெறும் பாட புத்தகங்கள் மட்டும் என்று செம போர். அம்மாவுடன் சேர்ந்து படிக்கும் தருணங்கள் அறவே அற்றுப் போனது. நினைத்துப் பார்த்தால் அதற்கப்புறம் நான் எந்த பரிசுமே வென்றதில்லை.

OoO

பெரிய பெரிய படங்களைக் கொண்ட எழுத்தில்லாத புத்தகங்கள், தொன்ம / நாட்டுப்புறக் கதைகள், ஃபேண்டஸி வகை கதைகள், உதாரண ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு, சிறுவர் பாடல்கள் என்று பலப்பல வகை புத்தகங்கள் வரத் தொடங்கி சில பத்து வருடங்கள் ஆகியிருக்கின்றன. ஆனால், சிறுவர் இலக்கியத்திற்கான சரியான வரையறை தீர்க்கமாக இருந்ததில்லை.

நமது வீட்டு ஜூனியருக்கு புத்தகங்கள் சேர்க்கும்போது எல்லா வகை புத்தகங்களையும் தேடித்தேடி சேர்த்தோம். சில வருடங்களுக்கு முன்னர், அலுவலகத்தில் ஒரு முகம் தெரியாத புண்ணியவான் 'என் குழந்தைகளுக்கு இந்த புத்தகங்கள் படிக்கும் வயது தாண்டிவிட்டது. உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லுங்கள்' என்ற குறிப்போடு சில புத்தகங்களைப் பொதுவில் விட்டுச் சென்றிருந்தார். நல்ல கெட்டி அட்டை போட்டு, அமெரிக்க வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லித்தரும் புத்தகம் அதில் ஒன்று. இவ்வளவு நல்ல புத்தகத்தை பாதி விலையாகவோ, ஈ-பேயிலோ போட்டு பத்து டாலராவது பணம் பண்ணாமல், இப்படி அனாமத்தாகக் கொடுக்கிறாரே என்ற வியப்போடு யாரும் பார்க்குமுன் அப்படியே லவட்டிக் கொண்டு வந்துவிட்டேன். ஜூனியருக்கு சுவாரசியம் வருகிறதோ இல்லையோ, நமக்கு வரலாறு படிக்க ஆச்சு பாருங்கள்.

இப்பொழுது ஜூனியருக்கு ஆறு வயதாகிறது. டிஸ்னி வெளியிட்ட குழந்தைகள் புத்தகங்கள், அமர் சித்திர கதைகள், காமிக்ஸ் புத்தகங்கள், படப்புத்தகங்கள், குழந்தைகளுக்கான நாவல்கள் என்று கலவையாக ஒரு லைப்ரரியே வைத்திருக்கிறார். அவர் எந்தப் புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்து 'வாசிப்போமா' என்று கேட்டாலும், அந்த தருணத்தை நான் தவறவிட்டதேயில்லை. ஒருமுறை 'எங்கே அந்த வாவா புத்தகம்' என்று விடாமல் அனத்திக் கொண்டிருந்தார். என்னடா அது வாவா என்று துருவிப் பார்த்தால், ஜாவா கணிணி மொழி பற்றிய புத்தகத்தைத்தான் கேட்டுக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் அவரும் கோடிங் எழுதுகிறேன் என்று பேர் பண்ணிக்கொண்டு ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் என்று முழுநேர சோஷியல் மீடியா சேவை செய்வாராக இருக்கும்.

அவருடைய பள்ளி நூலகத்திலிருந்து வாரத்திற்கொரு முறை அவரே ஏதாவது புத்தகம் தேடிப்பிடித்து கொண்டு வருவார். சமயத்தில் கடி ஜோக்குகள் நிறைந்த புத்தகத்தைக் கொண்டுவந்து, அதை அரைகுறையாக வாசித்துவிட்டு விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டிருப்பார். இப்படிதான் ஒரு முறை, 'அப்பா உனது படுக்கையில் ஐஸ் கட்டிகளை பரப்பி விடப் போகிறேன்' என்றார். He filled his dad's bed with ice cubes because he likes a cold pop என்ற ஜோக்கின் பக்கவிளைவு அது. இரண்டொரு நாட்களுக்கு படுக்கை பக்கம் போகாமல் சோஃபாவிலேயே உறங்கிக் கொண்டிருந்தேன்.

குழந்தைகளுக்கான கதையை அவர்கள் விரும்பும் வகையில் சொல்வது தாத்தா பாட்டிகளுக்கே சித்தியான ஒரு கலை. அவர்கள் ஒரே முறை சொன்னதும் குழந்தைகள் சட்டென கதையைப் பிடித்துக் கொண்டுவிடுகிறார்கள். 'தெனாலிராமனின் பையன் தோட்டத்தில் பறித்த ரோஜாப்பூவையெல்லாம் சாப்பிட்டு விட, அவனைப் பிடித்துக் கொண்டு போன காவலர்கள் ராஜாவிடம் காட்டும்போது வெறும் கூடைதான் மிஞ்சியதாம்' என்று நம்மிடம் வந்து ரீ-டெலிகாஸ்ட் செய்துவிட்டு பகபகவென சிரிப்பார் ஜூனியர்.

"தி மாரல் ஆஃப் த ஸ்டோரி, சாரல் ஆஃப் த மழை' என்று எதையாவது தொடங்கினால் போர் அடிக்காதே என்று ஓடிவிடுகிறார். எல்லாக் கதைகளும் 'அப்புறம் அவர்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்' என்று முடிந்தாலும், குழந்தைகளுக்கே உரித்தான தேடலில் சில நீட்சிகள் வாய்த்துவிடுவதும் உண்டு.

OoO

'ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்'ல் இடம்பெற்ற 'மீனவனும் ஜீனியும்' என்ற இந்தக் கதையை ஜூனியரும் நானும் அடிக்கடி பரிமாறிக் கொள்கிறோம்.








"அன்று அந்த மீனவனுக்கு வலையில் எதுவும் சிக்கவில்லை. அந்தப் பெரிய கடலில், மீண்டும் மீண்டும் வலைபோட்டு தேடியதில் கிடைத்தது ஒரு ஜாடிதான். அந்த ஜாடிக்குள் ஏதாவது பெரிய புதையல் கிதையல் இருக்கும் என்ற ஆசையில் அவன் திறந்து பார்க்க, உள்ளிருந்து பெரிய ஜீனி ஒன்று பிரும்மாண்டமாய் வெளியே வந்தது. ஜாடியைத் திறந்து தன்னை விடுதலை செய்ததற்கு நன்றி கூறிய ஜீனி, பதிலுக்கு மீனவனை தான் விழுங்க வேண்டுமென்று வருத்தத்துடன் அறிவித்தது.

"பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பேரரசன் சாலமன் ஆட்சியில் ஜீனிகள் எல்லாம் பவர்ஃபுல்லாக இருந்தனவாம். பின்னர் ஏற்பட்ட சண்டையில், எல்லா ஜீனிக்களையும் பிடித்து ஜாடியிலே அடைத்து கடலில் வீசிவிட்டார் சாலமன். அப்படி தண்டிக்கப்பட்ட ஜீனிக்களில் இதுவும் ஒன்று. தன்னை யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்று பல நூற்றாண்டுகளாக காத்திருந்தது. அப்படி யாராவது வந்து காப்பாத்தினால், பதிலுக்கு நன்றியாக, அவர்களுக்கு பொன்னும் பொருளும், மணிகளும், நகைகளும், உலகின் அத்தனை அதிகாரங்களையும், சந்தோஷங்களையும் அளிக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்து காத்திருந்தது.

"இப்படியே ஒரு நூற்றாண்டு காத்திருந்தது. இரண்டு நூற்றாண்டுகள், மூன்று நூற்றாண்டுகள் என்று பல நூற்றாண்டுகள் ஓடியே போய்விட்டன. யாருமே வந்து ஜீனியை விடுதலை செய்யவில்லை. வெறுத்துப் போன ஜீனி, இனி யாராவது தன்னை விடுதலை செய்தால், அவர்களை அப்படியே விழுங்கிவிட்டுத்தான் மறு வேலை என்று எரிச்சலோடு இருந்தது.

"அந்த சமயத்தில்தான், நமது அப்பாவி மீனவனின் வலையில் ஜாடி சிக்கிவிட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது. ஜீனிகள் தீர்மானித்தால் தீர்மானித்ததுதான்.

"உன் கடைசி ஆசை என்று ஏதாவது இருந்தால் சொல், இல்லையேல் இப்படியே 'லபக்'கிவிடுகிறேன் என்று ஜீனி நெருங்கி வர, மீனவனுக்கு சடாரென ஓர் யோசனை உதித்தது.

"நீ பெரும் சக்திவாய்ந்த ஜீனியாகத்தான் இருக்கிறாய். ஆனால் இவ்வளவு பிரும்மாண்டமான ஜீனி எப்படி இந்த சின்னஞ்சிறு ஜாடியில் அடைக்க முடியும் என்று நம்பமுடியவில்லை. நீ ஏதோ புருடா விடுகிறாய் என்று சந்தேகமாக இருக்கிறது," என்கிறான் அவன்.

"அடேய் முட்டாளே, இதோ பார்," என்று சொல்லிவிட்டு, அந்த ஜாடிக்குள் தன்னுடைய எண்பது சாண் உடலையும் சுருட்டிக் கொண்டு உட்கார்ந்து நிரூபிக்கிறது. மீனவனோ டபாலென மூடியை எடுத்து ஜாடியை மீண்டும் இறுக்கமாக மூடிவிடுகிறான். ஜீனி மீண்டும் ஜாடி சிறையில் மாட்டிக்கொள்கிறது. அப்படியே அதைத் தூக்கி கடலில் தூர வீசிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோமென்று ஓடிவிடுகிறான். அப்புறம், மீனவனும் அவன் குடும்பத்தாரும் எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்".

கதையை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்வதற்குள், 'மீன் வலை எப்படி இருக்கும்?' 'வலை வீசுவது ஏன்றால் எப்படி?' 'எவ்ளோ பெரிய ஜாடி? எவ்ளோ பெரிய ஜீனி?" போன்ற பல கேள்விகள், சில செய்முறை விளக்கங்கள், புத்தகப் படங்களுக்கு உசாத்துணையாக பல்வேறு யூட்யூப் அசைபடங்கள், என்று ஒரு முனைவர் ஆராய்ச்சியே நடந்தேறிவிடும். அப்படியே தொடர்ந்து 'கடலில் வீசப்பட்ட ஜாடி என்னாகியது? மீண்டும் யாராவது கண்டெடுத்தால் என்னாகும்? ஜீனியிடமிருந்து தப்பிக்க இருந்த ஒரே ட்ரிக்கும் அதுக்கு தெரிஞ்சிப் போச்சே, இனி எப்படி அது ஏமாறும்?' என்ற கேள்விகளுடன் ஒரு sequel கதையே தயாராகிவிடும்.

இந்தக் கதையை கார்ட்டூன் படமாக இங்கே கண்டு களியுங்கள்.




இப்பொழுது ஜூனியருக்கு கொஞ்சம் சரளமாக வாசிக்கும் பயிற்சி ஏற்பட்டுவிட்டதால், டாக்டர் ஸ்யூஸ் (Dr. Seuss) புத்தகங்கள், பேட்மேன் காமிஸ்க், சிறுவன் Cailou-வின் உலகம் போன்றவற்றை ரசித்து வாசித்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது எங்கள் வீட்டு 2 வயது குட்டி இளவரசிக்கு கதையை எடுத்துச் சொல்கிறார். குட்டி இளவரசியார் உடனே எங்களுக்கும் அதே கதையை மழலையில் சொல்ல, நாங்கள் அதை மொழிபெயர்த்து புரிந்து கொள்கிறோம். இவர் கொஞ்சம் 'ஸ்ட்ரிக்ட்' டீச்சர் என்பதால் சரியாக புரிந்துகொண்டதற்கான அறிகுறிகள் தெரியும்வரை கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார். வாழ்க்கைதான் எத்தனை சந்தோஷ புதையல்களை கொண்டிருக்கிறது பாருங்கள்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தை இலக்கியத்திற்கான சாத்தியங்கள் எக்கச்சக்கம். குழந்தைகள் வாயிலாக அந்த வாய்ப்புகளை எல்லாம் இயன்றவரையில் துய்ப்பது நமக்கான வரம்.

OoO

இதுவே நீளமான பதிவாகப் போய் விட்டது. என்றாலும் நமக்குள் இருக்கும் குழந்தை நம்மில் சிலரில் இது போன்ற சமயங்களில் காதைத் தீட்டிக் கொண்டு எட்டிப் பார்க்கக்கூடும். தாத்தா சொன்ன கதைகள் சில பிற்சேர்க்கையாக, அவர்களுக்கு மட்டும்:

ரெண்டு பண்டாரம் 

ரெண்டு பண்டாரம் சிவன் கோவில் வாசல்ல இருந்தாங்களாம். போறவர்ற பக்தர்கள் இவங்களப் பாத்து ஏதாவது பணம் காசு திருவோட்டுல போடுவாங்க. காசு விழுந்ததும் அதை 'படக்'னு எடுத்து சொம்புக்குள்ள ஒளிச்சு வச்சிருவார் ஒரு பண்டாரம். திருவோடு காலியாக இருந்தாத்தானெஅதிகமா காசு விழும்....

ரெண்டாம் பண்டாரமோ, நீள ஜடாமுடி வளத்து வச்சிருப்பார். இவர் சொம்புக்குள்ள ஒளிச்சு வச்சார்னா, அவரு தன்னோட சடைக்குள்ள காசை ஒளிச்சுக்குவார். இப்படியே ரெண்டு பேரும் நிறைய பணத்தை சொம்புக்குள்ளயும், சடைக்குள்ளேயும் ஒளிச்சு ஒளிச்சு எக்கச்சக்கமா சேத்து வச்சிருந்தாங்க.

ஒரு நா, ரெண்டு பேரும் அக்கம்பக்கம் உக்காந்து யாசகம் பண்ணிட்டிருக்கிறப்ப, நடுவில் வந்த ஒரு பக்தர் உணர்ச்சிப் பெருக்கோடு 'சம்போ ஜோதி'ன்னு சிவபெருமானை நோக்கி கூச்சல் போட்டு சாமி கும்பிட்டார்.

முத பண்டாரத்துக்கு தூக்கி வாரிப்போட்டுது. யார்றா அது நம்ம சொம்பை சோதிக்கச் சொல்றதுன்னு படால்னு திரும்பிப் பார்த்தா, பக்கது பண்டாரம் சடையை விரிச்சுப் போட்டுட்டு உக்காந்திருக்கார். ஆஹா, சாமி கும்பிடற மாதிரி இவந்தான் நம்ம ரகசியத்தை நாலு பேர் தெரிய உரக்க சொல்றான் கோவம் வந்திடுச்சு.

உடனே இவர் சிவனைக் கும்பிடற மாதிரி, 'சடைய ஜோதி'ன்னு உரக்க கத்திக்கிட்டே விழுந்து விழுந்து சாமி கும்பிட்டார். ரெண்டாம் பண்டாரத்துக்கு இப்ப ஜிவ்வுன்னு ஆகிப்போச்சு. தன்னுடைய சடைய தொட்டு தொட்டுப் பாத்துகிட்டார். இருந்தாப்ல இருந்துகிட்டு இந்த பண்டாரப்பய நம்ம ரகசியத்த போட்டு உடைக்கிறான் பார்ன்னு உரக்க 'சொம்போ சோதி' என்று உருண்டு புரண்டு கும்பிட ஆரம்பித்தார்.

முதல் பண்டாரம் 'சடைய சோதி'ன்னு கத்திட்டே விழுந்து விழுந்து கும்பிட, ரெண்டாம் பண்டாரம் 'சொம்ப சோதி'ன்னு உருண்டு புரண்டு கும்பிட ஒரே கந்தரகோலமாகி ஊரே திரண்டு வந்திடுச்சு. எடுங்கடா அந்த சொம்பை-னு எடுத்துப் பாத்தா அம்புட்டும் பணம். இவனோட சடைய பிடிச்சுப் பார்த்தா செருகி வச்சமேனிக்கு ஏகத்துக்கு பணம் இருந்ததாம்.

பாவம் வயித்துக்கு இருக்கட்டுமேன்னு பிச்சைப் போட்டா, இப்புடி ஊரை ஏமாத்தி ஒளிச்சு வக்கிறீங்களான்னு அம்புட்டையும் அடிச்சுப் புடுங்கிட்டு இரண்டு பண்டாரங்களையும் ஊர்க்காரங்கள்லாம் துரத்தி விட்டாங்களாம்.

காது! காது! லேது! லேது!

ஒரு சத்திரத்தில் ஒரு பாகவதர் தங்கியிருந்தாராம். அப்பொழுது அங்கே வழியோடு போன வழிபோக்கன் ஒருவரும் வந்து தங்கினாராம். எல்லாரும் நல்லா படுத்து தூங்கிட்டு இருக்கும்போது, சுவத்தோட சாத்தி வச்சிருந்த பாகவதரோட தும்புரு நழுவி வழிபோக்கரோட தலைமேல விழுந்திடுச்சாம். அவர் காது அதில சிக்கிக்க, இவர் முழிச்சுகிட்டு 'காது! காது!'ன்னு கத்தினாராம்.

படால்னு முழிச்சுகிட்ட பாகவதருக்கு செம கோவம் வந்திடுச்சு. பாகவதரோ தெலுங்குக்காரர். அந்த வழிபோக்கன் தன்னோட தும்புருவை 'என்னோடது' 'என்னோடது'ன்னு சொல்லிகிட்டே அபகரிச்சிட்டு ஓடறானேன்னு பாஞ்சுப் பிடிச்சி இழுத்துகிட்டே 'லேது! லேது!'ன்னு கத்தினாராம். வழிபோக்கன் 'காது, காது'ன்னு கத்த, பாகவதர் 'லேது, லேது'ன்னு பிடிச்சு இழுக்க ஒரே ரகளை. அப்புறம் ஊர்க்காரங்கள்லாம் வந்து சமாதானப்படுத்தி பிரிச்சு விட்டாங்க.

சாக்கா, பேக்கா 

ஒருநாளைக்கு ஒரு பண்டாரத்திற்கு பயங்கர பசி. அப்ப ஒரு கல்யாண வீட்டைப் பாத்தானாம். முன்னபின்ன யாருன்னே தெரியாதவங்களா இருந்தாலும், ஊர்ல கல்யாணம்னா, மார்ல சந்தனம்தானேன்னு 'கபால்'னு உள்ள புகுந்திட்டான்.

அப்புறம்தான் தெரிஞ்சது அது கன்னடக்காரவங்க கல்யாணம். அங்க அவங்க எல்லாரும் பேசிக்கறது ஒண்ணும் புரியவே இல்லை இவனுக்கு. நேரா பந்தியில் போய் உக்காந்திட்டு, மளமளன்னு, குனிஞ்ச தல நிமிராம, சாப்பிட ஆரம்பிச்சிட்டான். தலைய நிமிந்தா யாராச்சும் எசகுபிசகா கேள்வி கேட்ருவாங்களோன்னு பயந்திட்டு நிமிராமல், இலையில் போட்டது ஒண்ணுவிடாம சாப்பிட்டுட்டான்.

இவன் சாப்பிடற அழகு பரிசாரகனுக்கு ரொம்ப பிடிச்சிட்டது. போட்டது அத்தனையும் அள்ளி அள்ளி சாப்பிடறானேன்னு ஒரே சந்தோஷம். பண்டாரத்தை ஸ்பெஷலா கவனிக்கணும்னு, அவன்கிட்ட வந்து 'சாக்கா? பேக்கா?'னு கேட்டானாம்.

நம்மாளு பரிசாரகன் கையில் இருக்கற தட்டைப் பாத்திட்டு.... ஏதோ புது தின்பண்டம்தான் கொண்டு வந்திருக்கானோன்னு நினச்சிட்டு 'சாக்குல ரெண்டு, பேக்குல ரெண்டு போடப்பா'ன்னானாம்.

சுத்தியிருக்கிறவங்களுக்கு எல்லாம் இவன் கல்யாண வீட்டைச் சேர்ந்தவன் இல்லைன்னு தெரிஞ்சு போக, முதுகுல ரெண்டு, மூஞ்சியில ரெண்டு போட்டு துரத்திடாங்க.

முருங்கைக்காய்ப் பிரியர்

ஒரு வீட்டில ஒரு விசேஷம். புதுசா யாராவது விருந்தாளியக் கூப்பிட்டு சாப்பாடு போடறது அவங்க வழக்கம். அன்னிக்கு விருந்தாளியா வந்தவருக்கோ முக்கியமாக 2 ப்ரின்சிபிள் இருந்தது. சாப்பிடும்போது எதுவும் பேசக்கூடாது. ரெண்டாவது, இலையில் பரிமாறிய எதையும் மீதம் வைக்கக் கூடாது.

அன்னிக்குன்னு அந்த வீட்டில் முருங்கைக்காய் சாம்பார் செய்திருந்தாங்க. வீட்டுக்காரரும் அவர் சம்சாரமும் விருந்து பரிமாற, விருந்தாளி மௌனமா சாப்பிட்டுட்டிருக்கார். முருங்கைக்காயை நல்லா மென்னுட்டு சக்கையையும் சேர்த்து முழுங்கிடறார். அவர்தான், இலையில் போட்ட எதையும் மிச்சம் வைக்கமாட்டாரே.

இவர் இப்படி சக்கையெல்லாம் சேர்த்து சாப்பிடறதைப் பாத்ததும் வீட்டுக்காரருக்கும், அவர் மனைவிக்கும் ஒரே ஆச்சரியம். முருங்கைக்காய்ன்னா எம்புட்டுப் பிரியம் பாருன்னு, அந்தம்மா கூட இரண்டு கரண்டி சாம்பார் விடறாங்க. இவரால வாயத் தொறந்து 'வேணாம்'னு சொல்ல முடியல. ம்ஹும்... ஆஹும்ம்....னு கையக் கால ஆட்டறார். ஆனாலும், விடாம இலையில் போட்டது அத்தனையும் மென்னு முழுங்கிட்டார்.

'அடியே.... அவர் கையக் கால ஆட்டி இன்னும் முருங்கைக்காய் கொண்டான்னு கேக்கறார்... போ போ... போய் உள்ள இருக்கற சாம்பார் மொத்தமும் கொண்டுட்டு வா'ன்னு வீட்டுக்காரர் சொல்றார். இலை காலியாறதுக்கு முன்னாடி இன்னும் முருங்கைக்காய் வந்து விழுது.

நம்மாளுக்கு முடியல. வேகவேகமா இலையை காலி பண்ணிட்டு எழுந்து ஓடிடலாம்னு சக்கையெல்லாம் மென்னு முழுங்கறார். முருங்கைக்காய் மேல இவ்வளவு பாசமான்னு பாத்திட்டிருந்தவங்க கண்ணிலேர்ந்து கரகரன்னு தண்ணியே வந்திட்டுது.

'புதுசா நாலு முருங்கைக்காயைப் பறிச்சிட்டு வாங்க, மறுக்கா சாம்பார் வைக்கிறேன்'னு அந்தம்மா சமையக்கட்டுக்குப் போக, வீட்டுக்காரர் கொல்லையில் இருந்த முருங்கைக்காய் மரத்துக்கு ஓட, விருந்தாளி இந்தப்பக்கமா துண்டைக் காணோம், துணியக் காணோம்னு வீட்டை விட்டே ஓடிட்டார்!

ஸ்ரீதர் நாராயணன் தொடர்ந்து எழுதிவரும் ஜூனியர் குறிப்புகள் இங்கே

படங்கள்: தமிழ் காமிக்ஸ் உலகம், அமேசான் மற்றும் பிற.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...