A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

19 Jan 2014

யுவன் சந்திரசேகர் - 23 காதல் கதைகள் முதல் நினைவுதிர்காலம் வரை

பதிவர்  - வெ. சுரேஷ்

1999 அல்லது 2000ம் வருடம் என்று நினைக்கிறேன்.வழக்கம் போல விஜயா பதிப்பகம் சென்று சில வழக்கமான சிறு பத்திரிக்கைகள் வாங்கிவிட்டு வேறு ஏதாவது இருக்கிறதா என்று நோட்டமிட்டதில் அரண்யம் என்ற பளபளப்பான ஒரு பத்திரிக்கையை பார்த்தேன் முதல் இதழ் என்று தெரிந்து புரட்டியதில் பரிச்சயமான சில எழுத்தாளர்கள் பெயர் இருந்ததால் வாங்கினேன். அதில்தான் யுவன் சந்திரசேகர்  என்ற பெயர் அறிமுகமாகியது. 23 காதல் கதைகள் என்ற சிறுகதையா குறுநாவலா என்று சொல்லமுடியாத ஒரு ஆக்கத்தைப் படித்தேன். சற்றே காமச்சுவை தூக்கலாக இருந்தபோதிலும் பதின்ம பருவத்தின் மனநிலையும் மனித வாழ்வில் சிறியதாகத் தோன்றும் எளிய  தற்செயல் நிகழ்வுகளின் நீடித்த தீர்மானகரமானத் தாக்கங்களும், மனித சுபாவத்தின் எளிதில் அனுமானிக்க முடியாத ​தன்மைகளும் அழகாகப் பதிவாயிருந்தன. யுவன் சந்திரசேகர் என்ற பெயரை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். பின் அவரேதான் எம்.யுவன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுபவர் என்றும் தெரியவந்தது.
   
பிறகு அவரது குள்ளச்சித்தன் சரித்திரம் படித்தேன். தமிழின் யதார்த்தவாத, இயல்புவாத நாவல்களையே ஒரு 15 வருடங்களாகப் படித்து வந்திருந்த எனக்கு அது ஒரு பெரிய மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது. அன்றாட வாழ்வில் நடக்கும் இயல்புக்கு மீறிய சம்பவங்களை இயல்பான, குறும்பும் குதூகலமும் கொப்பளிக்கும் நடையில் கூறிய மிக சுவாரசியமான  நாவல் அது. க.நா.சுவின் அவதூதர் நாவலுக்குப் பிறகு தமிழில் நான் படித்த நல்ல மீயதார்த்த படைப்பும் அதுவே. இதிலும் வாழ்வின் மீது எதிர்பாராத தற்செயலாக நிகழும் சிறு  நிகழ்வுகள் ஏற்படுத்தும் நீடித்தத் தாக்கங்களும், மனித மனத்தின் முன்ஊகிக்க முடியாத புதிர்த் தன்மைகளும் மாற்று மெய்ம்மை என்று அவர் சொல்லும் யதார்த்தத்தை மீறிய  நிகழ்வுகளும் பெரும்பங்கு வகித்தன. இத்தன்மைகள் யுவனின் signature அம்சங்கள் என்று சொல்லலாம். 
              
பின்பு யுவனின் சிறுகதைத் தொகுப்புகள், நாவல்களான பகடையாட்டம், கானல் நதி, தனித்தனி குறுங்கதைகளாகப்  பார்த்தால் குறுங்கதைகளாகவும் ஒன்றுசேர்த்து பார்க்​கையில் ஒரு நாவலாகவும் தோன்றும் மணற்கேணி என்று தொடர்ந்து வாசித்தேன். ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு களம் என்று யுவன் எனக்கு மிகவும் நெருங்கிய படைப்பாளிகளில் ஒருவரானார். யுவனின் பெரும்பாலான படைப்புகளின் கதாநாயகனான கிருஷ்ணனும் அவனை விட்டு இளவயதிலேயே மறைந்து பிரியும் அவனது தந்தையும் அவரது மகோதர வயிறும் அவர்கள் வீட்டுப் பசு லட்சுமியும் எனக்கு மிக நெருங்கிய உயிர்கள் ஆனார்கள். சுகவனமும் இஸ்மாயிலும் எனக்கும் நண்பர்கள் ஆனார்கள்.
            
இந்த நாவல்களில் பகடையாட்டம்,  கானல் நதி இவ்விரண்டும் முற்றிலும் தமிழ் மண்ணிற்கு வெளியே நடைபெறும் தமிழ் கதாபாத்திரங்களே  இடம்பெறாத படைப்புகளாகும். அதனாலேயே சற்று அன்னியத்தன்மை கொண்ட படைப்புகளாகவும்  தோன்றியது. பகடையாட்டம் சுஜாதாவின் சொர்க்​கத்தீவையும் (அதன் மூலங்களான  1984 மற்றும் The B​rave New World  நாவல்களையும்) நான் மிக இளவயதில்  படித்திருந்த T​he L​ost Horizon என்ற ஒரு ஆங்கில நாவலையும் நினைவூட்டியது.
                 
கானல் நதி ஒரு வீழ்ச்சியுற்ற வங்காள ஹிந்துஸ்தானி இசைக் கலைஞனை  பற்றியது. ஆனால் அதில் அவன் வீழ்ச்சிக்கான  காரணங்கள் வலிமையாகச் சொல்லப்படவில்லை என்றும் அதில் ஒரு தவிர்க்க இயலாத தன்மை (Inevitability) இல்லையென்றும்  எனக்குத் தோன்றியது. இசை சார்ந்த அனுபவங்கள் மட்டுமே ஓரளவு நன்றாக வந்திருந்ததாக நான் நினைத்தேன். பிறகு வந்ததுதான்  யுவன் அதுவரை படைத்ததில் ஆகச்சிறந்ததாக நான் நினைத்த  வெளியேற்றம் நாவல். இதிலும் யுவனின் படைப்புகளின் signature அம்சங்கள் என்று நான் முன்னர் குறிப்பிட்டவை​ இருந்தாலும் மிகச்சிறந்த அம்சமாக இருப்பது  ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அவரையும் அறியாமல் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் விட்டு விடுதலை  ஆக விழையும் தீராத வேட்கை.

ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத, இறுதியில் மட்டுமே ஒரு இணைகோட்டில் சந்திக்கும் வெவ்வேறு தனிமனிதர்களின் வாழ்வின் மூலம், யுவனுக்கே உரித்தான தனித்துவம் மிக்க சரளமான, குறும்பும் குதூகலமும் நகைச்சுவையும் தீவிரமும் பொருந்திய நடையில் சொல்லப்பட்டிருக்கும். மேலும் இதில் யுவன் ஒரு டேன் பிரவுன் காரியமும் செய்திருந்தார், இந்த நாவலில் வரும் மாயத்தன்மை வாய்ந்த அனைத்து நிகழ்வுகளும் நிஜமாகவே தன கண் முன்னே நிகழ்ந்தவை என்று பின்னுரையில் குறிப்பிட்டிருந்தார். இது இந்நாவலுக்கு மேலும் ஆழம் சேர்த்த ஒன்று. யுவன் பொதுவாக அதிகம் கட்டுரைகள் எழுதுவதில்லை. ஆனால் அவர் ஒரு சிறந்த கட்டுரையாளராகவும்  விளங்கக்கூடும் என்பதற்கு இந்த நாவலின் பின்னுரை ஒரு உதாரணம்.
                   
பிறகு வந்த யுவனின் இரு நூல்கள் பயணக்கதை நாவலும் ஏமாறும் கலை சிறுகதைத் தொகுப்பும். பயணக்கதை வித்தியாசமான வடிவத்தையும் (ஒரு பயணத்தில் மூன்று நண்பர்கள் தாங்கள் கற்பனையில் வடித்த மூன்று கதைகளை ஒருவருக்கொருவர் சொல்வது போல் அமைந்தது), அவரது முத்திரையான விறுவிறுப்பான நடையையும் கொண்டிருந்தாலும் வெளியேற்றத்துக்குப் பிறகு வந்ததனாலேயே ஒரு மாற்று குறைந்தது போல் எனக்குப் பட்டது. ஒரு வகையில் அது இயல்பானதும்கூட. ஒரு உச்சத்தின் பின் நிகழ்வது இறக்கம்தானே. இது எனக்கு இனி வரும் யுவனின் படைப்புகள் எப்படி இருக்குமோ என்ற ஒரு anxietyஐ கொடுத்தது.
                  
ஆனால் என் anxiety தேவையற்றது என்று இப்போது வந்திருக்கும் நினைவுதிர்காலம் நாவலின் மூலம் நிரூபித்திருக்கிறார் யுவன்.யுவன் ஒரு கவிஞர் எ​ன்பது நாம் அறிந்ததே.ஆனால் யுவனிடம் ஒரு compartmentalisation உண்டு. அவரது உரைநடைப் புனைவுகளில் நானறிந்தவரையில் மிகக் கூர்மையான தர்க்கமும் போத மனமுமே  அதிகம் வெளிப்படுவதாக நான் நினைப்பேன். கவித்துவம் மிக்கப் பகுதிகள் ஒப்புநோக்​கக் குறைவானவை. அந்தக் குறையை நினைவுதிர்காலம் நாவலில் நிவர்த்தி செய்திருக்கிறார் யுவன். நினைவுதிர்காலம் என்ற தலைப்பே கவித்துவமானதுதான். முழுக்க முழுக்க ஒரு நேர்காணல் வடிவிலேயே அமைந்திருக்கும் ​இந்த நாவலில் பல இடங்களில் இசை குறித்த அனுபவங்களை விவரிக்கும் இடங்களிலும் பிற இடங்களிலும்கூட கவித்துவம் மிக்க வரிகள் நாவல் முழுவதும் விரவி  மிளிர்கின்றன.உதாரணத்துக்கு சில வரிகள்

  • வழங்குபவனும் வாங்குபவனும் ஒரு புள்ளியில் சங்கமிப்பதன் மூலம் இசை எனும் அனுபவம் சாத்தியமாகிறது.
  • கடலின் ஆழத்தைப் பற்றி தக்கை என்ன சொல்லிவிட முடியும்?
  • மனித மனதின் ஆழ் படுகைகளில் கூட்டு நனவிலியின் ரகசிய தாழ்வாரங்களில் அன்புக்கான விழைவு சுரந்தவாறிருக்கிறது. புறவயமான காரணிகளால் வெளிப்படுத்த இயலாமல் போன அன்பும் கிடைக்க இயலாமல் போன அன்பும் என மாபெரும் ஏக்கத்தின் மீது தலைமுறைகள் வந்து வந்து செல்கின்றன.சக ஜீவன்மீது தான் செலுத்த நேரும் வன்முறை குறித்த ஒற்றை உணர்வை நிரந்தரமாக அடைகாத்து வரும் மனிதப் பிரக்ஞை உராய்வின் கதியை, உஷ்ணத்தைத் தணிக்கும் விதமாகக் கண்டறிந்த எண்ணையே இசை.

 போன்ற பல அழகான வாக்கியங்கள் இதில் பரந்து விரவியுள்ளன.

முழுக்க முழுக்க ஒரு ஆங்கில நேர்காணலின் தமிழாக்கமாகவே படைக்கப்பட்டிருக்கிறது இந்நாவல். அப்படி ஒரு மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணலையே நாம் வாசிக்கிறோம் என்ற வகை​யில் அமைந்த ஒரு இறுக்கமான நடையிலும் கவித்துவம் மிக்க வரிகளுக்கு நிறையவே இடமிருப்பது இதன் சிறப்புகளில் ஒன்று.

வெற்றிபெற்ற ஒரு மகத்தான, அரிதான இந்துஸ்தானி வயலின் இசைக் கலைஞர் ஹரி ஷங்கர் தீட்சித் உடனான அவரது முழு வாழ்வையும் பின்னோக்கி ஒரு நேர்காணலில் காண்பதாக அமைந்திருக்கும் இந்நாவலின் ​மையம் ஹரிஷங்கர் தீக்ஷித்திற்கும்  அவரது தமய​னும் குருவும் இன்னொரு வெற்றி பெற்ற மகத்தான ஹிந்துஸ்தானி சாரங்கி இசைக் கலைஞர்  சிவசங்கர் தீக்ஷித்திற்குமான உறவும் பிரிவும், அவர்களுக்கிடையேயான அன்பும் வெறுப்பும்தான். ஹரிஷங்கர் தீகிஷித்தின் நேர்காணல் வழியாக எழுந்து வருவது சிவஷங்கர் தீக்ஷித்தின் சித்திரமேயாகும்.

நேர்காணல் முழுக்க முக்கிய பங்கு வகிப்பது தமயனைப் பற்றிய தம்பியின் அன்பும் பக்தியும் தவிர்க்கமுடியாத, உள்ளுறைந்து நிற்கும் வெறுப்பும் அவர் 40 வருட காலம் (அவரது மறைவு வரை)  தன்  தமையனைப் பிரிந்து ஒருவொருக்கொருவர் முகமுழிகூட இல்லாமல் வாழ நேரிட்டமை​யின் ஆழமான வருத்தமுமேயாகும். பல இடங்களில் அவர் மனதில் நிறைந்திருப்பது, அன்பா வெறுப்பா என்றே சொல்ல முடியாத ஒரு உணர்வுமதான். தன் ​வாழ்க்கை என்பதே தன்  அண்ணன் எனும் கரும்பலகையின் மீது எழுதப்பட்ட வெள்ளை எழுத்துக்கள்தான் என்றும் அந்தக் கரும்பலகை இல்லாமல் அந்த வெள்ளை எழுத்துக்களுக்கு இருப்பு இல்லை என்பதையும்  அவர் உணர்கிறார்.

நாவல் முழுக்கவே தம்பியின் கோணத்தில் சொல்லப்படுவதால் அண்ணனி​ன் கோணம் வெளிப்படுவதே இல்லையே என்று தோன்றும் சமயத்தில் அண்ணன் சிவஷங்கர் தீட்சித்தின் யெஹுதி மெனுஹின் நினைவு உரை மூலமாக மிகச் சில கவித்துவமிக்க வரிகளில் வருகிறது தன் தம்பியுடனான உறவு முறிவு குறித்து அவர் என்ன நினைத்தார் எனும் கோணம்.அதுதான் நான் மேற்கோள் காட்டியுள்ள வரிகளில் மூன்றா​வதாக வருவது.

பொதுவாக நான் இதுவரை படித்த இசை குறித்த நாவல்களில் இசை அனுபவம் என்பது கேட்கும் இடத்திலிருந்தே சொல்லப்​பட்டிருக்கும் இதில்தான் நானறிந்தவரை அநேகமாக முதல் முறையாக  ஒரு கலைஞன் தன் கலையை நிகழ்த்தும்போது அவன் கொள்ளும்  மனநிலை வெகு அற்புதமாக பதிவாகியுள்ளது.

இந்த நாவலில் சிறு குறைகள் என்று நான் காண்பது தீட்சித்தின் முன்னோர் வடபாரதத்தில் இருந்து மராட்டியத்திற்கு இடம் பெயர்வதற்கான காரணங்கள் சற்றே தேய்வழக்காக​ இருப்பதும் யுவனின் சில வடஇந்தியப் பெயர்த் தெரிவுகளும். விஜய் மஞ்ச்ரேகர், ஷிகர் தவன் என்ற பெயர்களில் இசைக் கலைஞர்களை அவர் அறிமுகம் செய்யும்போது பிரபலமான இந்தப் பெயர்களின் பின்னே உள்ள அசல் உருவங்கள் என்னை தொந்தரவு செய்தன. கிரிக்கெட் தெரியாவிட்டால் இந்தத் தொந்தரவும் இருக்காது என்பது உண்மைதான்.

நாவலை முடித்தவுடன் மனதில் ஏற்படும் ஒரு அசாதாரணமான அமைதியும்  எங்கோ தூரத்தில் ஒலிப்பது  போல் மனதின் காதுகளில் கேட்கும் சாரங்கி இசையுமே என்னைப் பொருத்தவரை இந்நாவலின் வெற்றிக்கு சாட்சிகள் என்பேன். இரண்டு முடிவுகள் எடுத்தேன். ஹிந்துஸ்தானி இசையை மேலும் அதிகம் கேட்க வேண்டும். யுவனின் கவிதைகளை முழுமையாகப் படிக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையை முதலில் ஆரம்பித்தபோது நினைவுதிர்காலம் பற்றி மட்டுமே எழுதுவதாகத்தான் இருந்தேன். ஆனால் யுவனின் நாவல்களைப் பற்றிய ஒரு சுருக்கமான பார்வையாகவே  இது வந்திருக்கிறது. காரணம் ஒரு வேளை இதுவாக ​இருக்கலாம்-  

1990களுக்கு பின் எழுதவந்து இன்றுவரை தீவிர இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பவர்களின் வரிசையில் ஏனோ யுவன் சந்திரசேகருக்கு உரித்தான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றே நான் எப்போதும் நினைத்து வந்திருக்கிறேன். ஜெயமோகனைத் தவிர யுவனின் படைப்புகளை வேறு எவரும் ஓரளவு விரிவாகக்கூட விமரிசி​த்தது இல்லை என்றே நான் நினைக்கிறேன்(ஒருவேளை நான் சொல்வது தவறாக இருந்தால் நான் மகிழ்ச்சியே அடைவேன்).

இந்த எனது கட்டுரைகூட அவரது நாவல்களைப் பற்றி மட்டுமே பிரதானமாகப் பேசுவதாகும். அவரது ஏராளமான சிறுகதைகளில் ஏமாறும் கலை, ஏற்கனவே, கடல் கொண்ட நிலம், இரு அறைகள் மட்டுமே கொண்ட வீடு, தாயம்மா பாட்டி சொன்ன 43 கதைகள், மீகாமரே மீகாமரே, நீர்ப்பற​வைகளின் தியானம் உள்ளிட்ட பல குறிப்பிடத்தகுந்த கதைகள் நினைவில் உள்ளன. அவற்றைப் பற்றி தனியே எழுதவேண்டும். அவரது கவிதைகளைப் பொருத்தவரை  எனக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. ஏனெனில் எனக்கு ஏறக்குறைய ஒரு 15 ஆண்டுகளாக எதனாலோ கவிதைகள் படித்து உள்வாங்கிக் கொள்ளும் மனநிலையை ​நான்​ இழந்து விட்டதாகவே ஒரு நினைப்பு உள்ளது. மீண்டும் கவிதைகள் பக்கம் திரும்ப வேண்டும் யுவனின் கவிதைகளிலிருந்தே துவக்க நினைக்கிறேன்.

அவரது சமகால எழுத்தாளர்களான ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அளவுக்கு யுவன் ஏன் பேசப்படுவதில்லை என்பதற்கு ஒரு முக்கியமான காரணம் அவர் அபுனைவுகளை தவிர்த்தே வந்திருப்பதும் இணையத்தில் அவரது எழுத்துகள் இடம் பெறாதிருப்பதும்தான் என்று நி​னைக்கிறேன். சொல்லப்போனால் சுந்தர ராமசாமிக்குப் பிறகு கவிதை, சிறுகதை, நாவல் என்ற மூன்று வடிவங்களிலும் படைப்புகள் வடிப்பது யுவன் மட்டுமே என்று நினைக்கிறேன். மேலும், யுவன் ஒரு அருமையான உரையாளர் என்பது பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட விழாவில் தெரியவந்த ஆச்சரியம் - அன்று அவரது உரைதான் மிகச்சிறந்ததாக இருந்தது. எனவே யுவன் அண்மையில் காலச்சுவடு இதழில் அடுத்தடுத்து இரண்டு அருமையான கட்டுரைகளை எழுதியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது தொடரும் என்றும் நம்புகிறேன்.

புகைப்பட  உதவி - குள்ளச்சித்தன் சரித்திரம், மற்றொரு வாசிப்பனுபவம், வாசகர் வட்டம்

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...